Published : 25 Mar 2017 12:23 PM
Last Updated : 25 Mar 2017 12:23 PM

தி இந்து செய்தி எதிரொலி: கடனில் தத்தளித்த பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நிதி - ஜெனரேட்டர்களை இயக்கவும் நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவு

‘தி இந்து’ செய்தி எதிரொலியாக பத்திரப்பதிவு நடக்காமல் கடனில் தத்தளிக்கும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழக பத்திரப்பதிவு துறை, சென்னை, கோவை, மதுரை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய 9 மண்டலங்களாக செயல்படுகின்றன. இந்த மண்டலங்களில் மொத்தம் 532 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. மாநகரங்கள், தொழில் நகரங்கள், கோயில் நகரங்கள், சுற்றுலா நகரங்களில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளொன்றுக்கு 60 முதல் 150 பத்திரப்பதிவுகள் நடந்தன. மற்ற பத்திரப்பதிவு அலுவலகங்களில் 40 முதல் 80 பத்திரப்பதிவுகள் நடந்தன.

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவால் 85 சதவீதம் பத்திரப் பதிவுகள் நடக்கவில்லை. அதனால், பத்திரப்பதிவு துறை மூலம் கிடைக்கும் பெரும் வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை.

பத்திரப்பதிவு அலுவலகங் களுக்கு ஆண்டுதோறும் மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம், குடிநீர் கட்டணம், பேனா, பென்சில், சொத்துவரி மற்றும் அலுவலக அன்றாட பராமரிப்பு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் குறிப்பிட்டத் தொகை நிதி ஒதுக்குவார்கள். ஆனால், பத்திரப்பதிவு குறைந்ததில் இருந்து இந்த நிதி ஒதுக்கப்படவில்லை.

பத்திரப்பதிவு தடையில்லாமல் நடந்தபோது காலை முதல் இரவு வரை பத்திரப்பதிவுகள் பரபரப்பாக நடக்கும். அதிகாரிகள், ஊழியர் கள் நிற்க நேரமில்லாமல் இயங்கு வார்கள். கடந்த காலத்தில் பத்திரப்பதிவு நேரம் காலமில்லாமல் நடந்தபோது மின்தடையால் பத்திரப்பதிவுப்பணிகள் பாதிக்கப் பட்டன. அதனால், மின்சாரம் இல்லாத நேரத்தில் பத்திரப்பதிவு தடைப் படக்கூடாது என்பதற்காக எல்லா அலுவலகங்களுக்கும் ஜெனரேட்டர் கொடுத்துள்ளனர். ஆனால், அதனை இயக்குவதற் கான டீசல் கொடுப்பதில்லை. அதிகாரிகளும், ஊழியர்களும் அவசரத்திற்கு பணிகள் தடைப் படக்கூடாது என்பதற்காக டீசல் வாங்கி ஜெனரேட்டர்களை இயக்கினர்.

இதுகுறித்து ‘தி இந்து’வில் கடந்த 11-ம் தேதி விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, இந்த செய்தி எதிரொலியாக தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர் களை இயக்க டீசல் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் அன்றாட செலவினங்களுக்கு நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலக அன்றாட பயன்பாட்டிற்கு காகித பண்டல்களும் வழங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: கடந்த 9 மாதங்களாக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வழங்கும் அன்றாட செலவின நிதியை தமிழக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அன்றாட செலவினங்களுக்கு 9 மாதத்திற்கான நிதி ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வழங்கியுள்ளது. மொத்தம் வர வேண்டிய நிதியில் தற்போது 40 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

2013-14-ம் ஆண்டு ஜெனரேட்டர்களை இயக்க நிதி வழங்கினர். அதன்பிறகு இந்த நிதியும் வழங்கப்படவில்லை. தற்போது வருவாய் அதிகமுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு மட்டும் ஜெனரேட்டர்களை இயக்க மூன்று மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x