

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் பிரம்மோத்ஸவத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பல்லக்கு மண்டபம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோத்ஸவம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாளான திங்கள்கிழமை பல்லக்கு உத்ஸவம் நடைபெற்றது.
ஜெயேந்திரர் பிளாட்டினம் ஜூப்லி டிரஸ்ட் சார்பில், ஜெயேந்திரர் சங்கர மடத்துக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும், அவர் 80 வயதை நிறைவு செய்வதை முன்னிட்டும் காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் கோயில் வடக்குமாட வீதியில், பல்லக்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவத்தின்போது பல்லக்கில் வரும் அம்மன் அம்மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை ஜெயேந்திரர் திங்கள்கிழமை திறந்து வைத்தார். பிரம்மோத்ஸவத்தையொட்டி, அவ்வழியாக பல்லக்கில் வந்த காமாட்சியம்மன், அந்த மண்படத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனை ஜெயேந்திரர், விஜயேந் திரர், டிரஸ்ட் தலைவர் நாராயணன் ஆகியோர் தரிசித்தனர்.