

ரயில் பாதைகளில் இறப்போரின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டு களாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ரயில்பாதையை கடக்க முயன்றும், தவறி விழுந்தும், தற்கொலை செய்துகொண்டும் 1297 பேர் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் ரயில் விபத்துகளால் ஆண்டுதோறும் சராசரியாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாக தேசிய குற்றப் பதிவு காப்பகம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி வாக னங்கள் மூலம் ரயில் பாதைகளை கடந்து செல்வது, செல்போன் பேசிக்கொண்டே பாதைகள் அருகே நடந்து செல்வது, மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலில் தவறி விழுதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
உயிர் இழப்புகளைத் தடுக்க சுற்றுச்சுவருடன் நவீன ரயில்வே கேட்கள் அமைப்பது, சுரங்கப் பாதைகள் அமைத்தல், மேம்பாலம் கட்டுதல், தடுப்பு சுவர்கள் அமைத் தல் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என பல்வேறு பணி களை ரயில்வே துறை மேற் கொண்டு வருகிறது.
இதன் காரணமாக தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரயில் பாதைகளில் கடந்த 2 ஆண்டுகளாக இறப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ரயில்பாதையை கடக்க முயன்றும், தவறி விழுந்தும் தற்கொலை செய்து கொண்டும் 1,297 பேர் இறந்துள்ளனர். அதிக பட்சமாக தாம்பரத்தில் 132 பேரும், ஜோலார்பேட்டையில் 109 பேரும், திருப்பூரில் 91 பேரும், கொருக்குப்பேட்டையில் 91 பேரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கோட்டம் ரயில்வே போலீஸ் எஸ்.பி.விஜயகுமார் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
சென்னை கோட்டம் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாது காப்பு படை ஆகியவை இணைந்து ரயில்பாதைகளில் விதிமுறைகள் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். படிகளில் தொங்கியபடி வரும் பயணிகளை எச்சரித்து அனுப்புகிறோம். தொடர்ந்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலித்து வருகிறோம்.
இதுதவிர, பாதுகாப்பான பயணம் குறித்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளும், செவ் வாய்க்கிழமைகளில் சோதனை பணிகளும் மேற்கொண்டு வருகி றோம். ரயில்பாதைகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க சுரங்கப் பாதைகள் மற்றும் சிறிய ரயில் மேம்பாலங்களை அமைக்கவும் ரயில்வே துறையிடம் பரிந்துரை செய்துள்ளோம்.
இதுபோன்ற பணிகளால் ரயில்பாதைகளில் நடக்கும் இறப்புகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் ரயில் பாதையை கடக்க முயன்றும், தவறி விழுந்தும் தற்கொலை செய்து கொண்டும் 1297 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2015-ல் 1410 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஆண்டு களில் இதை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.