

தமிழக அரசு அவசரமாக தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்தது ஏற்புடையதல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் போன்றோர் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற, நிரந்தர சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1 வார காலமாக அறவழியில் போராடி வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இரவு, பகல் பாராமல் பனி, வெயில், மழை என்று பாராமல் தங்களை வருத்திக் கொண்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இச்சூழலில் போராட்டக்காரர்கள் மத்தியில் சமாதானம் ஏற்படாமல் இருக்கும் போது தமிழக அரசு அவசரமாக தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்ததும், அதனை நடத்த முயற்சிகள் செய்ததும் ஏற்புடையதல்ல. இது சரியான முடிவும் அல்ல. நல்ல தீர்வாக அமையாது.
எனவே மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றிட வேண்டும்.
தொடர்ந்து அமைதியான முறையில் போராடுகின்ற மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டுக்காக போராடும் போரட்டக்காரர்களிடம் காவல்துறையினர் மென்மையானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற நிரந்தர சட்டம் வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ஏற்று, ஆதரவு கொடுத்து, நிறைவேற்றி உடனடியாக நல்ல தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.