கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன்

கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன்
Updated on
1 min read

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் நேற்றே ஒதுங்கிவிட்டேன்" என்றார்.

அவர் கூறியதாவது:

கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.அமைச்சர்கள் என்னிடம் ஆலோசித்திருந்தால் நானே அறிவித்திருப்பேன்.

கடந்த 14-ம் தேதி வரை அமைச்சர்கள் என்னை சந்தித்துவந்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் பேசினர். 4 நாட்களில் திடீரென்று அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

அமைச்சர்கள் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கப்பார்க்கிறார்கள். அவர்களது அச்சத்துக்கு என்ன காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்னை நீக்கினால்தான் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்மை கிடைக்குமென்றாம் அந்த நன்மை அவர்களுக்கு கிடைக்கட்டும். எக்காரணத்தாலும் கட்சியில் பிளவு ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பம். கட்சியில் பிளவு ஏற்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். அமைச்சர்களுடன் எந்த சண்டை சச்சரவையும் நான் விரும்பவில்லை.

துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பதவியை எனக்கு அளித்தவர் பொதுச்செயலாளர். அதனால், பதவியை ராஜினாமா செய்வதற்கில்லை.

இதுகுறித்து சசிகலா முடிவெடுப்பார். எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை அதனால் ஏமாற்றமும் இல்லை. இனியும் எனது அரசியல் வாழ்க்கை தொடருமா என்பதை இறைவன் தீர்மானிப்பார்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in