

ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனை விஷயத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவிப்பது, அரசு மீதான சந்தேகத்தை வலுப்படுத்து கிறது என்று விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விசாரணைக்காக நேற்று காலை, மதியம் என 2 வேளையும் நீதிமன்றத்துக்கு வந்தார். வழக்கு தொடர்பாக அவர் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார். பல்வேறு மாவட்டங்களில் சிறைகளுக்குள் கலவரம் நடக்கிறது.
கைதிகள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். தற்போது ராம்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார். ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல. திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். எனவே, சிறை மரணங்கள், முறைகேடுகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
தவிர, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறும் போலீஸார், ராம்குமாரின் உறவினர் மற்றும் வழக்கறிஞர்களிடம் ராம்குமாரை வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறியது ஏன்?
ராம்குமார் மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன. எனவே, ராம்குமார் மரணம் குறித்து மட்டுமல்லாமல், சுவாதி கொலை குறித்தும் சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்.
ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனைக் குழுவில் எங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தார். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. சுவாதி கொலையில் உள்ள உண்மைகளை மறைப்பதற்காகவே அரசு இதுபோல நடந்து கொள்கிறது. ராம்குமார் வழக்கில் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், சட்டரீதியாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.