Published : 25 Nov 2013 10:21 AM
Last Updated : 25 Nov 2013 10:21 AM

மின்வெட்டு பிரச்சினை: மின் வாரியம் அவசர ஆலோசனை

மின்வெட்டு பிரச்சினையை சமாளிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, மின் வாரிய தலைமைப் பொறியாளர்கள் அவசரக் கூட்டம், சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்கிறது. இதில் தவறாமல் பங்கேற்குமாறு, அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் மின் வாரிய தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், மின் வெட்டு பிரச்சினைக் குறித்து ஆலோசிக்க, அனைத்துத் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் சார்பில் வரும் 26-ம் தேதி, மின் நுகர்வோர் கூட்டு நடவடிக்கைக் குழு அவசரக் கூட்டம் கோவையில் நடக்கவுள்ளது.

அதிகரிக்கும் மின்வெட்டு

தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் தொழிற்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிகள் முடங்கியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. காற்றாலையில் இருந்து கிடைத்த 8,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே தமிழக மின் வாரியத்தால் வினியோகிக்க முடிந்தது. வடசென்னை, வள்ளூர், நெய்வேலி, கல்பாக்கம், தூத்துக்குடி மற்றும் மேட்டூர் உள்ளிட்ட ஒன்பது மின் நிலையங்களில் உள்ள 12 அலகுகளில், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பல்வேறு காரணங்களால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவே மின் வெட்டுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

தீர்வு காண வேண்டும்

மின்வெட்டு குறித்து தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) சென்னை மண்டல துணைத் தலைவர் சி.பாபு கூறும்போது, “மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது, தொழிற்துறையினரை கவலையடையச் செய்துள்ளது. இது தற்காலிக பிரச்சினை என்றே நினைக்கிறோம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

மின்வெட்டால் கோவை மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் (கொடீசியா) தலைவர் ஆர்.ராமச்சந்திரன், ‘தி இந்து’நிருபரிடம் கூறியதாவது:

மின்வெட்டால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக திட்டமிட்டு, முன் அறிவிப்பு செய்து மின்வெட்டை அமல்படுத்தினால் ஓரளவு நிலைமையை சமாளிக்க முடியும். குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை தொடர்ச்சியான மின்சாரம் அளித்தால்தான் தொழிற்கூடங்கள் இயங்க முடியும்.

இதுகுறித்து பேச, மின் வாரிய தலைமைப் பொறியாளரை திங்கள்கிழமை சந்திக்க உள்ளோம். வரும் 26-ம் தேதி, அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் சார்பில், மின் நுகர்வோர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் அவசரக் கூட்டம், கோவையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சடகோபன் கூறும்போது, “மின் வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், வர்த்தக நிறுவனங்கள் அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டன. மின்சாரம் இல்லாத நேரங்களில், பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு இணைப்புகளில் சிக்னல் கிடைக்காமல், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். திருமண மண்டபங்களில் ஜெனரேட்டருக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். மின் வெட்டு குறித்த உண்மை நிலையை முதல்வர் விளக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே, மின் வெட்டை சமாளிப்பது குறித்து ஆலோசிக்க, அனைத்து தலைமைப் பொறியாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை மின் வாரியம் கூட்டியுள்ளது. வரும் 30-ம் தேதி சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மண்டலப் பொறியாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. காற்றாலையில் இருந்து கிடைத்த 8,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே தமிழக மின் வாரியத்தால் வினியோகிக்க முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x