

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிராவயலில் மஞ்சுவிரட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால் திருப்பத்தூர் டிஎஸ்பி முருகன் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிராவயல் கிராமத்தில் உள்ள வாடிவாசலில் வேலுச்சாமி அம்பலம் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கரு.பெரியகருப்பன் எம்எல்ஏ, சிவகங்கை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர் எஸ்.குணசேகரன் மற்றும் கிராமத்தினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பின்னர் வாடிவாசல் முன் காளையை அவிழ்த்து விட்டனர்.
சிராவயலில் போலீஸார் கெடுபிடி அதிகமாக இருந்ததால், அதன் அருகே உள்ள பரணிக் கண்மாய், ஊர்குளத்தான்பட்டி கண்மாய், காவானூர் கண்மாய், தென்கரை, வைரவன்பட்டி உள்ளிட்ட கண்மாய்ப் பகுதியில் திரண்டிருந்த இளைஞர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
ஹெச்.ராஜா மீது வழக்கு
சிங்கம்புணரியில் கிராம மக்கள் தடையை மீறி நேற்று முன்தினம் காளைகளை அவிழ்த்து விட்டு மஞ்சுவிரட்டு நடத்தினர். இதில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவும் பங்கேற்று காளையை அவிழ்த்து விட்டார்.
இது தொடர்பாக சிங்கம்புணரி போலீஸார் நேற்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக ஹெச்.ராஜா, ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் குகன் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்துள் ளனர். அதேபோல் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக சிராவயல் கிராமத்தினர் மீதும் திருப்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.