முதல்வர் தொகுதியில் ரூ.374 கோடியில் 2,400 திட்டப் பணிகள்

முதல்வர் தொகுதியில் ரூ.374 கோடியில் 2,400 திட்டப் பணிகள்
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2011-லிருந்து இதுவரை ரூ.374 கோடியில் 2 ஆயிரத்து 477 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

649 திட்டப் பணிகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2011-12 முதல் 2015-16 நிதியாண்டு வரை ரூ.320 கோடியே 53 லட்சத்தில் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் மின் விளக்குகள் என 1,824 பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. இதில் ரூ.126.36 கோடி மதிப்பீட்டில் 1,175 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 649 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் 2015-16 நிதியாண்டில் மாநகராட்சி மூலதன நிதியில் முதல்கட்டமாக 347 சாலைகள் ரூ.28 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது. 2-ம் கட்டமாக 256 சாலைப் பணிகள் ரூ.25 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இது மட்டுமல்லாது மேலும் 50 பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ரூ.16 கோடியே 66 லட்சத்தில் கொருக்குபேட்டையில் ரயில்வே மேம்பாலம், கார்னேசர் நகர் பள்ளியில் ரூ.1 கோடியே 18 லட்சத்தில் 12 வகுப்பறைகள், 8 ஆயிரம் பேருக்கு தலா 20 லிட்டர் சுத்தமான குடிநீர் விநியோகம் ஆகிய பணிகள் நிறைவுபெற்ற பணிகளாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in