

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் எங்கும் பரவலாக மழை நீடித்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் வைகை கரை ஓர பகுதியில் வாழும் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதால் பல அணைகள் நிரம்பி வருகின்றன. இதனிடையே வைகை ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்ட இருப்பதால் அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் வடிவதற்கு அனைத்து அடைப்புகளையும் சரி செய்து விட மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆணையிட்டுள்ளார்.
மஞ்சளாறு, கொதையாறு, சோத்துபாறை அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. வியாழக்கிழமை நிலவரப்படி வைகை அணையில் 48.20 கனஅடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு 3,716 க்யூசெக்ஸ் நீர் வரத்து உள்ளதாகவும், அணையிலிருந்து சுமார் 1,660 க்யூசெக்ஸ் நீர் வெளியேற்றப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர் மழை காரணமாக வெள்ளம் அதிகரிக்க வாய்புள்ளது என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், கரை ஓர மக்கள் வெள்யேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.