தீபாவளி பண்டிகை: திருவல்லிக்கேணி பகுதியில் காற்று, ஒலி மாசு அதிகம் - மாசு கட்டுப்பாட்டு ஆய்வில் தகவல்

தீபாவளி பண்டிகை: திருவல்லிக்கேணி பகுதியில் காற்று, ஒலி மாசு அதிகம் - மாசு கட்டுப்பாட்டு ஆய்வில் தகவல்
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசுபாட்டில் திருவல்லிக்கேணி தொடர்ந்து 3 வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மாநிலத்தின் 10 முக்கிய நகரங்களில் தீபாவளியின்போது காற்று மற்றும் ஒலி மாசடைவது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்தியில் கூறிருப்பதாவது:

சென்னையில் திருவல்லிக் கேணி, பெசன்ட் நகர், நுங்கம் பாக்கம், சௌகார்பேட்டை, தியாகராய நகர் ஆகிய இடங்களிலும், மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஒசூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய 10 நகரங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் சென்னை திருவல்லிக்கேணி அதிக அளவில் மாசுபட்டிருந்தது தெரியவந்தது. அந்தப் பகுதியில் சுவாசிக்கும்போது உள்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்களின் அளவு 297 மைக்ரோ கிராமாகவும், ஒலி அளவு 82 டெசிபல் ஆகவும் இருந்தது. குறைந்த அளவாக தி. நகரில் மாசு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு காற்றில் உள்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள் 180 மைக்ரோ கிராம் ஆகவும், ஒலி மாசு 80 டெசிபல் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற நகரங்களில் மைக்ரோ கிராம் அளவில் பதிவு செய்யப்பட்ட காற்று மற்றும் ஒலி மாசு அளவு வருமாறு:

மதுரை திருநகரில் காற்று மாசு 111, ஒலி மாசு 84, சேலம் - சிவா டவரில் காற்று மாசு 197 ,ஒலி மாசு 74, கோவை - பொன்னயராஜபுரத்தில் காற்று மாசு 164, ஒலி மாசு 68, திருச்சி - உறையூர் ராமலிங்க நகரில் காற்று மாசு 113, ஒலி மாசு 79, கடலூர் - சேகர் நகரி காற்று மாசு 87 , ஒலி மாசு 72, திருநெல்வேலி - சமாதானபுரத்தில் காற்று மாசு 44, ஒலி மாசு 72, திருப்பூர் - ராயபுரம் பகுதியில் காற்று மாசு 173, ஒலி மாசு 64, வேலூர் - ரங்கலாய மண்டபம் பகுதியில் காற்று மாசு 142, ஒலி மாசு 67, திண்டுக்கல் - என்.எஸ்.நகர் பகுதியில் காற்று மாசு 109, ஒலி மாசு 76 .

காற்று மாற்றும் ஒலி மாசடைவதில் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவல்லிக்கேணி முதலிடத்தில் உள்ளது இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறும்போது, “திருவல்லிக்கேணி கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது அங்கு மழை பெய்கிறது. இதனால் மாசு அடைந்த காற்று வெளியேற முடியாமல் அடைபட்டுக் கொள்கிறது. இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் திருவல்லிக்கேணி முதலிடத்தில் உள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in