Published : 13 Jan 2017 06:06 PM
Last Updated : 13 Jan 2017 06:06 PM

பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: முதல்வர் ஓபிஎஸ் ஜன.15-ம் தேதி வழங்குகிறார்

தமிழக அரசின் சார்பில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது உட்பட 9 பேருக்கு விருதுகளை நாளை 15-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சி, தமிழக உயர்வுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்தாண்டுக்கான திருவள்ளுவர் விருது - புலவர் பா.வீரமணிக்கும், கடந்தாண்டுக்கு தந்தை பெரியார் விருது பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா.துரைசாமி, அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும் வழங்கப்படுகிறது.

காமராஜர் விருது டி.நீலகண்டனுக்கும், பாரதியார் விருது பேராசிரியர் ச.கணபதி ராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திருவிக விருது பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும், கி.ஆ.பே.விசுவநாதம் விருது மீனாட்சி முருகரத்தினத்துக்கும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளை வரும் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகிறார்.

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.ஒருலட்சத்துக்கான காசோலை, ஒருசவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இது தவிர வயது முதிர்ந்த 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணையும் வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x