

சசிகலா தயவால் அமைச்சரானவர் கள், அவருக்கு துரோகம் செய்து விட்டனர் என தினகரன் கைதை கண்டித்து நேற்று மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் சசிகலா, ஓ.பன் னீர் செல்வம், தீபா ஆகியோர் தலைமையில், அதிமுக மூன்று அணிகளாக பிரிந்தது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் திடீரென்று தினகரன் அதிமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் செயல்படத் தொடங்கினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக(அம்மா) சார்பில் தினகரன் போட்டியிட்டார். ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இந்த இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால் அந்த சின்னத்தையே தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
அதன்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், தினகரனை ஒதுக்கி வைத்து தனி அணியாக செயல்படத்தொடங்கினர். தினகரனை டெல்லி போலீஸார் இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கைது செய்தனர். அதனால், அதிமுக(அம்மா) அணியில் அதிருப்தியடைந்த தினகரன் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக அவரது கைதையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் முதல் முதலாக மதுரை பழங்காநத்தத்தில் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலூர் பஸ்நிலையம் எதிரே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ-கள் சாமி(மேலூர்) தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி, தலைமை கழக பேச்சா ளர் நாஞ்சில் சம்பத் ஆகி யோர் பேசினர். நாஞ்சில் சம்பத் பேசியதாவது: கட்சியை காப்பாற்றியது சசிகலாதான். அவர் இல்லையென்றால் அதிமுகவே இல்லை. 30 ஆண்டு இல்லற வாழ்க்கையை தொலைத்துவிட்டு கட்சியை வளர்த்தவர் சசிகலா. முகம் காட்டாமலே அவர் அதிமுகவை வழிநடத்தினார். விசுவாசத்தின் அடையாளமாக அவர் இருந்தார். அவரது தயவால் பலர் அமைச்சர்களாகினர். அந்த வரிசையில் ஓ.பன்னீர் செல்வத்தை உருவாக்கியவர், அவரை முதல்வராக்கியவர் சசிகலாதான். ஜெயலலிதா இறந்ததுமே முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலினுடன் கை கோர்க்க ஆரம்பித்துவிட்டார். ஒரே குரலில் இருவரும் பேசினர். அதனாலே அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமே, திருநெல்வேலி, தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை கட்சியினரை திரட்டுவோம். தினகரன் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெறும் வரும் வரையும், அவரை விடுதலை செய்யும் வரையும் இந்த போராட்டம் ஒயாது.
இவ்வாறு அவர் பேசினார்.
புகழேந்தி பேசுகையில், தமிழ கத்தில் 4 ஆண்டு ஆட்சி நீடிக்கும். கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதைதான், தமிழகத்திற்கு வரப்போவதாக தவறாக நினைத்துக் கொண்டு விரைவில் தேர்தல் வரப்போகிறது என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். பதவி கிடைக்காமல் ஆத்திரத்தில் அவர் பேசுகிறார் என்றார்.
அதிர்ச்சியில் உள்ளூர் அதிமுக அணியினர்
ஆரம்பத்தில் சசிகலா தலைமையில் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி அணியினர், அவரை தூக்கி வைத்து கொண்டினர். அவர் சிறை சென்றதும் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி.தினகரனை கொண்டாடினர். தற்போது முதல்வர், அமைச்சர்கள் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சசிகலா, தினகரன் படங்களை வைக்காமல் புறக்கணிக்கின்றனர். கடந்த வாரம் மதுரையில் முதல்வர் பங்கேற்ற கட்சி நிகழ்ச்சியில் உள்ளூர் அதிமுக(அம்மா) அணியினர் சசிகலா, தினகரன் படங்களை வைக்காமல் புறக்கணித்தனர்.
ஆனால், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மாவட்ட அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, மாவட்ட செயலாளர் வி.ராஜன் செல்லப்பா, மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் உள்பட கட்சியினர் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காமல் அவர்கள் ஆதரவில்லாமல் முன்னாள் எம்எல்ஏ சாமி தனி ஆளாக மதுரை முதல்வர் நிகழ்ச்சியை விட பல மடங்கு கூட்டத்தை திரட்டியதோடு திரும்பிய பக்கமெல்லாம் ஆர்ப்பாட்டத்தில் சசிகலா, தினகரன் படங்களை அதிகளவில் வைத்திருந்தார். முன்னாள் எம்எல்ஏ ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர், குறிப்பாக பெண்கள் அதிகளவில் திரண்டதால் உள்ளூர் அதிமுக (அம்மா)அணி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் அதிர்ச்சியடைந்தனர்.