

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள தேசிய அளவிலான நதிநீர் ஒற்றை தீர்ப்பாய சட்ட முன் வடிவை திரும்ப பெறக்கோரி வரும் 18-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான நதிநீர் ஒற்றை தீர்ப்பாயத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வி.பி.துரைசாமி (திமுக), ஆர்.தாமோதரன், பவன் குமார் (காங்கிரஸ்), கோவை தங்கம், விடியல் சேகர் (தமாகா), எஸ்.என்.பாலாஜி (விடுதலைச் சிறுத்தைகள்), கே.எம்.நிஜாமுதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தமிமுன் அன்சாரி எம்எல்ஏ (மனித நேய ஜனநாயக கட்சி), தெகலான் பாகவி (எஸ்டிபிஐ), முசாஹூதீன் (மமக), என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி) உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதி கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய வி.பி.துரை சாமி, ‘‘காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. கடந்த 30 ஆண்டு களாக நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி தேசிய அளவிலான நதிநீர் ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி அறிமுகம் செய்துள்ளார். இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய அளவிலான நதிநீர் ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை கைவிடக்கோரி வரும் 18-ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்வது என்றும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு அளிப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.
நதிநீர் ஒற்றை தீர்ப்பாய சட்டத்தை கைவிட வலியுறுத்தி உடனடியாக தமிழக சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக விவாதிக்க உடனடியாக அனைத் துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்துப் பேசி பிரச் சினைக்கு தீர்வு காண வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.