

போக்குவரத்துக் காவலர் விரட்டிச் சென்றதால் பாறையில் முட்டி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரின் செயலைக் கண்டித்து நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருமனூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). அவர் கடந்த 2 தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளியில் உள்ள தனது சகோதரி சுதா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை நாமக்கல் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். அப்போது முதலைப்பட்டி அருகில் உள்ள சாலையோர உணவகம் முன் நல்லிபாளையம் காவல் நிலைய போக்குவரத்துக்காவலர் டி.சிவக்குமார், வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தார்.
போக்குவரத்துக் காவலரைப் பார்த்த மணிகண்டன் வந்த வழியிலேயே திரும்பி சென்றுள் ளார். அதைக் கவனித்த போக்குவரத்துக்காவலர் சிவக்குமார், தனது இரு சக்கர வாகனத்தில், மணிகண்டனை விரட்டிச் சென்றார். செல்லப்பம்பட்டி மேடு அருகே மணிகண்டனை இடைமறிக்க காவலர் முயன்றார். அப்போது மணிகண்டன் நிலைதடுமாறி சாலையோர பாறையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
எனினும், முதலுதவி எதுவும் செய்ய காவலர் சிவக்குமார் முன்வராமல் அங்கிருந்து சென்று விட்டார். அதைக்கண்ட மக்கள், மணிகண்டனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தகவல் அறிந்த மணிகண்டனின் சகோதரி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விபத்து நடைபெற்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.