

சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 7-ம் தேதி மகளிர் காங்கிரஸை சேர்ந்த ஒரு சிலருக்குள் வாக்குவாதம், கைகலப்பு நடந்துள்ளது. இது கண்ணியக் குறைவானது, கண்டனத்துக்குரியது. கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிரானது. எந்த விதத்திலும் ஏற்க இயலாதது.
இச்செயலில் ஈடுபட்டவர்களிடம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு நபர்களிடம் இருந்து கிடைத்த தகவல்கள், தொலைக்காட்சிப் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கவுரி கோபால், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகமது சையத் கியாஸ் உல்ஹக் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர்.
இத்தகைய செயல்பாடுகள் இனிமேலும் நடைபெறக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.