

அதிமுக, திமுகவை தோற்கடிப்பதற் காகவே மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ‘‘மதிமுகவை அழிக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. என்னை ராஜதந்திரம் இல்லாதவன் என கருணாநிதி நினைக்கிறார். திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு நான் மேற்கொண்ட ராஜந்திர நடவடிக்கைகளே கார ணம். நான் சரியான கூட்டணியை அமைக்காமல் போயிருந்தால் திமுக ஆட்சி அமைத்திருக்கும்’’ என்றார்.
அதிமுகவுக்கு ஆதரவாக செயல் படுகிறார் என வைகோ மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப் படும் நிலையில் அவர் இவ்வாறு பேசியிருப்பது மக்கள் நலக் கூட் டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
திருச்சியில் வைகோ என்ன பேசினார் என்பது எனக்கு முழுமை யாக தெரியவில்லை. பொருளா தாரக் கொள்கைகள், சமூக பிரச் சினைகள், ஊழல் ஆகியவற்றில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, இந்த இரு கட்சிகளுக்கும் ஒரு அரசியல் மாற்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் நலக் கூட்டியக்கத்தை தொடங்கினோம். பின்னர் அது மக்கள் நலக் கூட்டணியானது.
எந்தவொரு கட்சியையும் ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்காக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கவில்லை. அதிமுக, திமுக இரண்டையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். தேர்தலுக்கு முன்பு வெளியிட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்திலும், 6 கட்சி கூட்டணி உருவான பிறகு வெளியிட்ட மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையிலும் எங்களது கொள்கை நிலைப்பாடுகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைகோவின் கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘திருச்சியில் வைகோ என்ன பேசினார் என்பது தெரியவில்லை. அவரது பேச்சை முழுமையாக அறியாமல் கருத்து கூறுவது சரியாக இருக்காது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் அரசியல் மாற்று வேண்டும் என்பதற்காகவே மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்’’ என்றார்.