

மாநிலம் முழுவதும் நடந்த லோக் அதாலத் மூலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு (சனிக்கிழமை) ஒரே நாளில் ரூ. 127 கோடியே 53 லட்சத்து 48 ஆயிரத்து 314 இழப்பீடாக பெற்றுத்தரப்பட்டது.
நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயற்குழு தலைவருமான அனில் ஆர்.தேவ் உத்தரவுப்படி இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரான நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் தலைமையில் நீதிபதிகள் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் காப்பீட்டு நிறுவன வழக்குகளை விசாரித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், வி.எம்.வேலுமணி, எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன் ஆகியோர் தனித்தனியாக பல்வேறு வழக்குகளை விசாரித்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் தலைமையில் லோக்-அதாலத் நடந்தது. இதேபோன்று 32 மாவட்ட நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டு, 694 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
மொத்தம் 75 ஆயிரத்து 128 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 10 ஆயிரத்து 54 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 127 கோடியே 53 லட்சத்து 48 ஆயிரத்து 314 இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்த தொகை முழுவதையும் உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகளின் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இதன்மூலம் லோக் அதாலத்தின் பயன் நேரடியாக பொதுமக்களுக்கு சென்றடைந்துள்ளதாகவும் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்தார். அப்போது நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் உடனிருந்தனர்.