

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன்(69), உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தவர் ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன். சட்டப்படிப்பை முடித்து, 1970-ல் திருநெல்வேலி மாவட்ட நீதிமன் றத்தில் தொழில் செய்துவந்தார்.
நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று குற்றவியல் நடுவராக பணியில் சேர்ந்த இவர், பின்னர் கும்ப கோணம் தலைமை குற்றவியல் நடுவராகவும், சென்னையில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முதன்மை நீதிபதியாகவும் பணிபுரிந்தார்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு களை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். 2002 முதல் 2005 வரை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராகவும், 2005 டிசம்பர் 10 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்து 2009-ல் ஓய்வு பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீஸார் இடையே ஏற்பட்ட கலவரத்தில் இவரும் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் 2-வது அவென்யூவில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார். அவர் நேற்று காலை மரண மடைந்தார். அவரது உடலுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், பதிவாளர் டி.ரவீ்ந்திரன் மற்றும் உச்ச, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், தற்போது பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி கள், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை பெசன்ட்நகர் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடந்தன.