

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும்; பயிர்கள் கருகிய விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும்; நதிகள் இணைப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யா கண்ணு தலைமையில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடைபெற்றது.
கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தும் நோக்கில் சென்னை வந்த விவசாயிகள் சங்கத்தினர், பேரணிக்கான அனுமதி கிடைக்காததால் எழும்பூரிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் எலிக்கறி உண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர், அடுத்ததாக கோவணத்தைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் வந்தபிறகு தங்கள் போராட்ட முறையை மாற்றிய விவசாயிகள் சங்கத்தினர், காலில் விழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் என்ன செய்வதெனத் தெரியாமல் திணற, அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.