

கிராமப்புறங்களில் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் நேற்று திருநெல்வேலி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மு.கருணாகரன் மனுக்கள் பெற்றார்.
சங்கரன்கோவில் வட்டம் களப்பாகுளம் கிராமம் பாரதிநகர், எழில் நகர் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:
கீதாலயா ரோடு பாரதிநகர் முக்கு அருகில் பிரதான சாலையில் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிக்கு இலவன்குளம், புளியம்பட்டி, நேதாஜி நகர், எழில்நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் வந்து செல்கின்றனர். இங்கு மதுக்கடை அமைத்தால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். கோயில்கள், பள்ளிகள் அமைந்துள்ளன. விசைத்தறி கூடங்களும் அதிகளவில் உள்ளன. மதுக்கடையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணராமநல்லூர்
தென்காசி தாலுகா குணராமநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட புளிச்சிகுளம், முப்புலியூர், அருந்ததியர்புரம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:
மத்தளம்பாறையில் செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகளை குணராமநல்லூர் கிராமத்துக்குள் கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகும். இந்த மதுக்கடைகளை கிராமப் பகுதிக்குள் அமைப்பதை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி கிராம மக்கள் பங்கேற்கும் போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்துபூந்துறை
திருநெல்வேலி சிந்துபூந்துறை யில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து புதிய தமிழகம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் எம்.எஸ்.செல்லப்பா மற்றும் சிந்துபூந்துறை பகுதி மக்கள் தனித்தனியாக அளித்த மனு விவரம்:
தாமிரபரணி நதிக்கரையில் மதுக்கடை அமைத்தால் தாமிர பரணியின் புனிதம் கெட்டு விடும். பொதுமக்களின் சுதந்திரம் பறிபோகும். ஆற்றுப் பகுதி திறந்தவெளி பாராக மாற்றப் பட்டுவிடும். பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிக்கும். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகளும் ஏற்படும். எனவே ஆற்றங்கரையில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஜ நகர்
மகாராஜநகர் உழவர் சந்தையை சேர்ந்த எம்.முருகன் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்: பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை அருகில் உள்ள ரயில்வே கேட்டின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பாலம் அமையும் போது வலதுபுறம் உள்ள உழவர் சந்தை மறைக்கப்படும். உழவர் சந்தைக்கு பெரும் நெருக்கடியும் உருவாகும். உழவர் சந்தைக்கு மக்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்படும். மக்கள் சந்தைக்கு வந்து செல்லும் வகையில் பாலத்திட்டத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டும். சந்தையின் பிரதான நுழைவு வாயிலில் இருந்து பாலத்தின் மறுபக்கம் செல்லும் வகையில் கூடுதலாக 2 தூண்கள் அமைக்கலாம். தரைமட்ட சுரங்க பாதை அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரன்கோட்டை
மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் வந்து அளித்த மனு விவரம்:
உக்கிரன்கோட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் 1 குடம் தண்ணீரை ரூ.5-க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழையூத்து
வடக்கு தாழையூத்து கோகுலம் நகரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆர்.மோகன் மற்றும் அப்பகுதி பெண்கள் அளித்த மனு விவரம்:
தாழையூத்து ஊராட்சி 12-வது வார்டு பகுதியில் மின்வாரிய அலுவலக எதிர் தெருவில் உள்ள விநாயகர் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அளிக்க வந்த மோகன், தனது கழுத்தில் பல்புகளால் ஆன மாலையை அணிந்திருந்தார்.
பணம் மோசடி புகார்
பாளையங்கோட்டையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் அளித்த மனுவில், “ பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளோம். பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன பணமோசடி கும்பலின் பாஸ்ப்போர்டை முடக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விக்கிரமசிங்கபுரம்
“விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அம்பலவாணபுரம் பிரதான சாலையிலிருந்து அமலி உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் கீழ்பக்கம் மற்றும் காந்திநகர் மேல்பகுதியிலிருந்து இருதயகுளம் கிராமம் வரை தார் சாலை அமைக்க வேண்டும்” என்று, காந்திநகர், இருதயகுளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி ராமையன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் என்பவரது தலைமையில் அளித்த மனுவில், “ராமையன்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 30 குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.