Last Updated : 21 Feb, 2017 12:09 PM

 

Published : 21 Feb 2017 12:09 PM
Last Updated : 21 Feb 2017 12:09 PM

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு - விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது தொ டர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது பல இடங்களில் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் இருந்ததை பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இப் பணி மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சரியாக நடைபெறவில்லை என அண்மையில் நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், என்.கிருபாகரன் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை நேற்று ஆய்வு செய்தனர். உயர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட நீதிபதிகள், ஒத்தக்கடை, நரசிங்கம் கண்மாய், கடச்சனேந்தல், கள்ளந்திரி கண்மாய், அப்பன் திருப்பதி, கிடாரிப்பட்டி, ஏ.வெள்ளாளப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், அரசு கூடுதல் வழக்கறிஞர் டி.முருகானந்தம் ஆகியோரும் உடன் சென்றனர். இந்த ஆய்வின்போது பல இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் இருந்ததை பார்த்து நீதிபதிகள் அதிருப்தியடைந்தனர்.

இது தொடர்பாக நீதிபதி செல்வம் தெரிவிக்கும்போது, “அனைத்து வேலைகளையும் நீதிமன்றத்தால் நேரடியாக மேற்கொள்ள முடியாது என்பதற்காகவே, அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம். ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாமல் இருப்பது வேதனை தருகிறது. எந்த பயனையும் தராத கருவேல மரங்களை அகற்றினால்தான் நிலத்தடி நீரை காப்பாற்ற முடியும். நாட்டின் நலனைக் கருதி இப்பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சீமைக் கருவேல மரத்தின் வேர் 120 அடி ஆழம் வரை செல்லக்கூடியது. அதன் விதை உயிரைக் கொல்லும் விஷத்தன்மை கொண்டது.

எனவே, சீமைக் கருவேல மரத்தின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கருவேல மரங்களை அகற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இப்பணியை ஒரு அலுவல் பணியாக மேற்கொள்ளாமல் சமூகப் பணியாக மேற்கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். ராமநாதபுரம் கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளனர். இது பாராட்டுக்குரியது” என்றார்.

கள்ளந்திரி கால்வாய் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களிடம், உங்கள் பகுதியில் சீமை கருவேல மரம் அகற்றப்பட்டதா என நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அதற்கு ஒரு சில இடங்களில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. முழுமையாக அகற்றப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகளிடம் பேசிய ஆட்சியர், “தனியார் இடங்களில் தான் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. 2 வாரத்தில் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும்” என உறுதியளித்தார்.

நிலம் கையகப்படுத்தப்படும் மதுரை ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 49,368 ஹெக்டேரில் சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. இதில் 10,193 ஹெக்டேர் அரசு நிலம். இதில் 1,490 ஹெக்டேரில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமள்ள 39175 ஹெக்டேர் தனியார் நிலமாகும். தனியார் நிலத்தில் உள்ள கருவேல மரங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்ற நோட்டீஸ் அனுப்பப்படும்.

அதற்குள் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் அரசே அகற்றிவிட்டு, அதற்கான செலவை (ஹெக்டேருக்கு ரூ.34,500) இரட்டிப்பாக வசூலிக்கப்படும். அந்தப் பணத்தை கட்ட தவறினால் வருவாய் வசூல் சட்டப்படி நிலம் கையகப்படுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x