

கோவை ரயில் நிலையத்தையொட்டி இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று அகற்றப்பட்டன.
கோவை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கடலைக்காரத் தெருவில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ரயில்வே நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பினர்.
ஏற்கெனவே அங்கிருந்த வீடுகளை அகற்ற முற்பட்டபோது, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, குடியிருப்புகளை காலி செய்ய அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், கடலைக்காரத் தெருவில் குடியிருந்தோருக்கு குடிசைமாற்று வீடுகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு, அங்கு குடியிருப்பவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்கு குடியிருந்த 40 குடியிருப்புதாரர்கள், தாங்களாகவே அந்தப் பகுதியை காலி செய்து சென்றனர். தொடர்ந்து அந்த வீடுகளை ரயில்வே ஊழியர்கள் இடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இது குறித்து அங்கு குடியிருந்தவர்கள் கூறும்போது, “நாங்கள் கடந்த 48 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். எங்களுக்கு மாற்றும் இடம் தருவதாக கூறினர். எனினும், இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதி வாரியம் சார்பில் ‘டோக்கன்’ மட்டுமே வழங்கப்பட்டது. எப்போது வீடு ஒதுக்குவார்கள் எனத் தெரியவில்லை. வெளியில் ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ், ரூ.5 ஆயிரம் வாடகை கேட்கிறார்கள். கூலி வேலைக்குச் செல்லும் எங்களால் இந்த தொகையை எப்படி செலுத்த முடியும்? தற்போது எங்களது உறவினர் வீடுகளுக்குச் செல்கிறோம். குடிசை மாற்று வாரிய வீடு விரைவில் ஒதுக்குமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றனர்.
கோவை வடக்கு வட்டாட்சியர் எஸ்.சிவக்குமார் கூறும்போது, “ஆக்கிர மிப்பு வீடுகளை காலி செய்யுமாறு பலமுறை வலியுறுத்திவிட்டோம். இப்போது அவர்களாகவே குடியிருப்புகளை காலி செய்துவிட்டுச் செல்கின்றனர். விரைவில் அவர்களுக்கு குடிசை மாற்றுவாரிய வீடுகள் ஒதுக்கப்படும்” என்றார்.