

குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடியும், கால்நடை தீவனங்களுக்காக ரூ.20 கோடியும் ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிவாரணம் வழங்கும் பணிகள், பிரதமர் பயிரக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு தொகை தொடர்பாகவும் ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வறட்சியால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.501 கோடியே 70 லட்சத்தில் பல்வேறு துறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
மேலும், வரும் கோடைகால குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.25 கோடியுடன் கூடுதலாக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், நகராட்சி நிர்வாகத் துறைக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.30 கோடியுடன் கூடுதலாக ரூ.35 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.25 கோடியுடன் கூடுதலாக ரூ.25 கோடியும் என மொத்தம் குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள கால்நடை தீவனப் பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் 290 தீவனக் கிடங்குகள் மூலம் ரூ.10 கோடியே 17 லட்சத்தில் 8 ஆயிரத்து 915 டன்கள் உலர்தீவனம் மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களுக்கு கால்நடை தீவனத் தேவைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
அனைத்து குடிநீர் திட்டங்களிலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் நல்ல தரமானதாக இருப்பதை உறுதி செய்த பின்னரே வழங்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெற்று வரும் வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், இதர அரசு நலத் திட்டங்கள் குறித்து மாவட்டங்களில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஒருவாரத்துக்குள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.