Published : 24 Apr 2017 12:39 PM
Last Updated : 24 Apr 2017 12:39 PM

தமிழக பிரச்சினைகளை எடுத்துரைக்காமல் நிதி ஆயோக் கூட்டம் வீணடிப்பு: முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீணடித்துவிட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "மிகப் பெரிய கடன் சுமையில் தமிழகத்தை தள்ளிய அதிமுக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, குறைந்தபட்ச அளவிலாவது பலன்கள் கிடைத்து, நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாடு ஓரளவேனும் மீளாதா என்ற ஏக்கம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் - சொல்லவும் முதல்வர் தவறி விட்டார்.

தமிழகத்தில் "விஷன் 2023" பற்றி விலாவாரியாக பேசியிருக்கும் முதல்வர், அந்த திட்டத்தினை செயல்படுத்த துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பதை மறந்து விட்டு, ஏதோ அந்த திட்டத்தின் கீழ் "உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக மக்களுக்கு செய்து கொடுக்க" செயல்பட்டுக் கொண்டிருப்பது போல் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் முன்னிலையிலேயே இமாலயப் பொய்யை கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் குடிநீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைக் கூட மூட மனமில்லாமல், அந்த சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக வகை மாற்றியிருக்கும் அதிமுக அரசு, தமிழக மக்களுக்கு "உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை" அளிப்பதற்கு செயல்பட்டு வருவதாக கூச்சமின்றி பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய வங்கிகளில் கொடுக்கப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து கொடுத்து, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை காப்பாற்றுங்கள், என்று கோரிக்கை வைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறாரர்கள். அந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை.

அதிமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை சீர்கேட்டால் இன்றைக்கு தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது. அது பற்றி நிதி அயோக் கூட்டத்தில் பேசி, தமிழக அரசின் நிதி நிலைமயை சீராக்க எதையும் பேசவில்லை.

இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளும், புதிய அணைகளுமே.

ஆனால் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அண்டை மாநிலங்களுடனான இந்த முக்கிய தடுப்பணை பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை.

தமிழகத்தில் நதி நீர் இணைப்புத் திட்டங்களை கிடப்பில் போட்டது அதிமுக அரசு. குறிப்பாக தாமிபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் முக்கால்வாசிப் பணிகளை கழக அரசு முடித்து விட்டுச் சென்ற நிலையில் அந்த திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் நதி நீர் இணைப்பு பற்றி பேசியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "அத்திக்கடவு - அவினாசி" திட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.

மாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடப் போகிறது என்ற அச்சத்தில், ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் வலியுறுத்திப் பேசிவிட்டு, தமிழகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, அண்டை மாநிலங்கள் தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் வந்திருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்துவிட்ட துரோகமாகும்.

அதைவிட "உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை" தமிழக மக்களுக்குச் செய்து கொடுக்கும் "விஷன் 2023" திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமரும், அனைத்து மாநில முதலமைச்சர்களும் அமர்ந்திருந்த "நிதி ஆயோக்" கூட்டத்தில் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகை கட்டவிழ்த்து விட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தோ, மாநில அரசு கேட்ட வெள்ளம், வர்தா, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும், தமிழக மக்களையும் மீட்டெடுக்க கேட்ட 88 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்குங்கள் என்பது குறித்தோ "நிதி ஆயோக்" கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கூறாதது உள்ளபடியே கவலையளிக்கிறது.

தமிழகத்தில் எதிர்கட்சிகளின் வற்புறுத்தலால், "நிதி கேட்டோ" "திட்டங்கள் கேட்டோ' ஏதோ பெயரளவில் கடிதம் எழுதிவிட்டு பிரதமரையோ, அண்டை மாநில முதல்வர்களையோ நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அந்த கடிதங்களில் குறிப்பிட்டுச் சொன்ன கோரிக்கைகள், பிரச்சினைகள் பற்றிக் கூட முதலமைச்சராக இருப்பவர் பேச மறுப்பதுடன், மாநில உரிமைகளை எப்படி தாரை வார்த்து தமிழக மக்களை துன்பத்தில் துயரத்தில் சிக்க வைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆகவே "நானும் கச்சேரிக்குப் போனேன்" என்ற போக்கில் "நிதி ஆயோக் கூட்டத்தில்" கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் தமிழக நலன்கள், தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி "நிதி அயோக்" கூட்டத்தில் எடுத்துரைக்காமல் வந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x