Published : 08 Feb 2017 01:23 AM
Last Updated : 08 Feb 2017 01:23 AM

ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது: சசிகலா குற்றச்சாட்டு

ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.

இதையடுத்து அதிமுகவின் பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய சசிகலா, போயஸ் தோட்ட இல்லத்தின் வாசலில் நின்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அங்கே திரண்டிருந்த அதிமுக தொண்டர்களைப் பார்த்து இரட்டை இலையைக் குறிக்கும் வகையில் இரு விரல்களைக் காட்டி கையசைத்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, ''அதிமுகவில் குழப்பம் இல்லை. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னை மிரட்டியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியதில் உண்மை இல்லை. யாரும் அவரை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு நிர்பந்திக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் இணக்கத்தோடுதான் இருந்தார். சிலரின் தூண்டுதலின் பேரில்தான் அவர் இப்படிக் கூறியுள்ளார். ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. விரைவில் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்'' என்றார் சசிகலா.

சுருக்கமாகப் பேசி முடித்தவுடன் போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா சென்றார்.

முன்னதாக, என்னை கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க கூறினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 40 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியபின் நிருபர்களைச் சந்தித்த அவர், மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அறிவித்தார். ஆட்சிப் பொறுப்புக்கு நல்லவர் ஒருவர்தான் வரவேண்டும் என்றும், கட்சியைக் காப்பாற்ற தன்னந்தனியாக போராடுவேன் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். | விரிவாக வாசிக்க > >மக்கள், தொண்டர்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: ஓபிஎஸ் |

அதன் தொடர்ச்சியாக, அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x