Published : 21 Mar 2017 10:02 AM
Last Updated : 21 Mar 2017 10:02 AM

உள்ளாட்சி: குடிமராமத்து திட்டம்... குடிமக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்!

பண்டைய தமிழர் வாழ்வியலின் ஓர் அங்கம் குடிமராமத்து. தனித்து வசிப்பது மேற்கத்திய கலாச்சாரம். சமூகமாக வசிப்பது இந்தியக் கலாச்சாரம். நமது முன்னோர்கள் சமூகமாக வசித்தார்கள். சமூகமாக வேலை பார்த்தார்கள். சமூகத்துக்காக வேலை பார்த்தார்கள். அவை ஒவ் வொன்றும் திருவிழாக்களைப் போல அமைந்தன. விதைப்பு, நடவு, அறுப்பு ஒவ்வொன்றும் ஒரு கொண்டாட்டம். அப்படியான கொண்டாட்டங்களில் ஒன்றுதான் குடிமராமத்து!

வடகிழக்குப் பருவ மழைக்குப் பிந்தைய பயிர் அறுவடை முடிந்த தும், தென்மேற்குப் பருவ மழை வரும் முன்பாக விவசாயப் பணிகள் சற்றே ஓய்ந்திருக்கும். கோடை யின் தொடக்கக் காலம் இது. இதற் காகத் தெருத் தெருவாகத் தண்டோரா போட்டு, தேதியை அறிவிப் பார்கள். வீட்டுக்கு ஒரு நபர் ஏரியில் வேலை பார்க்க வர வேண்டும். முடியவில்லையெனில் கூலி ஆளை அனுப்ப வேண்டும். உள்ளூர் சூழலுக்கு ஏற்ப நிறைய விதி முறைகளும் விதிவிலக்குகளும் இருந்தன.

என்னென்ன வேலைகள்?

ஏரியின் உட்பரப்பில் கரையின் உயரத்தைப் போல இரு மடங்கு தூரம் தள்ளி தூர் வாரத் தொடங்குவார்கள். உதாரணத்துக்கு, கரையின் உயரம் 10 மீட்டர் எனில் ஏரியின் உள்பகுதியில் 20 மீட்டர் தள்ளி தூர் வாருவார்கள். கரையின் அடிப்பகுதி பலவீனம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள். இதன் பெயர் ‘தாக்கு’ எடுப்பது. இப்படி எடுக்கப்படும் ஏரியின் மண், மழைக் காலத்தில் ஏரி அறுந்து ஓடியிருக்கும் பள்ளங்களில் முதலில் கொட்டப்பட்டு சமப்படுத்தப்படும்.

தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள் கல் படுகைகளைக் கொண்டவை. மண் அரிப்பால் இந்தக் கல் படுகைகள் பல இடங்களில் பெயர்ந்திருக்கும். பெயர்ந்த கல் படுகைகளைத் தூக்கி, அங்கே மண்ணைக் கொட்டி மீண்டும் கல் படுகையைப் போட்டு சரிசெய் வார்கள். கரை பலவீனம் அடைந்தி ருக்கும் பகுதிகளில் ஏரியின் மண்ணைக் கொட்டி கரையைப் பலப் படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கு போக மீதம் இருக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மண்பாண்டங்கள் செய்வோர், வீடு கட்டுவோர் மற்றும் ஊரின் இதர தேவைகளுக்கும் மண் வழங்கப்படும்.

அடுத்ததாக, ஏரியில் வளர்ந் திருக்கும் புதர்கள், முள் செடிகள், மழைக் காலத்தில் அடித்துவரப் பட்ட குப்பைகள், உடைந்த மரங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்து வார்கள். இதன்பின்பு ஏரியின் உள்ளே வரும் நீர்வரத்துக் கால்வாய், மிகை நீர் வெளியேறும் வாய்க்கால்கள் தொடங்கி பாசனத்துக்கான பிரதான ‘அ’ கால்வாய்கள் தொடங்கி கடைமடை வயலுக்கு வரும் ‘எ’ மற்றும் ‘ஏ’ கால்வாய்கள் வரை மராமத்துப் பணிகள் நடக்கும்.

ஆக்கி ரமிப்புகள் அகற்றப்படும். மதகுகள், கலுங்குகளில் இருக்கும் அடைப்பு கள் நீக்கப்படும். இவைதான் குடி மராமத்தின் அடிப்படைப் பணிகள். தமிழகத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் நகர்மயத் திட்டங்கள் தொடங்கிய காலகட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடப்பட்டன. அதன்பின்பு, பல ஆயிரம் கோடி ரூபாய்களில் அரசு பல்வேறு திட்டங் களைச் செயல்படுத்தின.

ஆனால், அவை எல்லாம் எந்த லட்சணத்தில் செயல்படுத்தப்பட்டன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள குடி மராமத்துப் பணியும் அதுபோல ஆகிவிடக் கூடாது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் தமிழக முதல்வர் குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மற்ற மாவட்டங்களிலும் தொடங்கி யிருப்பதாக அரசு சொல்கிறது. நீர் வரத்து வாய்க்கால், கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வாய்க்கால்கள், கால்வாய்களில் கொள்ளளவுக்கு அதிகமாகப் படிந் துள்ள மண்ணை அகற்றுதல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

சமீபத்தில் இந்தத் திட்டத்தின்படி ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். அதாவது அந்தந்தப் பகுதி விவசாயச் சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பு மூலம் பணிகள் செயல் படுத்தப்படும். இவர்கள் திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதத்தை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ வழங்க வேண்டும்.

மீதித் தொகையை அரசு வழங்கும். மேற்கண்ட பணிகளைப் பொதுப் பணித்துறை கண்காணிக்கும். ரூ.10 லட்சத்துக்கு அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நீர் வளத்துறையின் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு செயல்படுத்தப்படும். இவை எல்லாம் தற்போது தமிழக அரசு சொல்லியிருக்கும் விஷயங்கள்.

அரசு சொல்கிறபடி பார்த்தால் திட்டத்தின் பங்குதாரர்கள் நீர்நிலை களின் பயனாளிகளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களே. ஆனால், திட்டம் தொடங்கிய இரு வாரங்களில் இங்கே என்ன நடக்கும்? பல்வேறு ஊர்களில் இப்படி ஒரு திட்டம் நடப்பதே விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் தெரியவில்லை. பொதுப்பணித் துறை அலுவலகங் களில் ஒப்பந்ததாரர்கள் முட்டி மோதுகிறார்கள். உள்ளூர் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்திருக்கின்றன.

ஆயக்கட்டுதாரர்களுக்கு பதில் ஒப்பந்ததாரர்கள் ஒரு லட்சம் ரூபாயை விவசாயிகள் பெயரில் செலுத்த முற்படுகிறார்கள். அவ்வாறு ஒரு லட்சம் ரூபாயை அவர்கள் செலுத்தினால் அரசு சார்பில் ஒன்பது லட்சம் தரப்படும். அந்தப் பணத்தை அவர்கள் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பத்து லட்சத்தில் ஒரு லட்சம் செலவழித்தாலே அதிகம். அதுமட்டுமல்ல; ஏரிக்குள் இருக்கும் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள மண்ணும் அவர்களுக்கு லாபம். வெட்டி எடுக்கும் மண்ணை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, லாரி மற்றும் பொக்லைன் வாடகையைக் கணக்கு காட்டி பத்து லட்சம் ரூபாயையும் சரிகட்டி விடுவார்கள்.

தன்னியல்பாக ஆங்காங்கே ஏரியில் தூர் வாரும் இளைஞர்கள், நீர்நிலைகளுக்குப் பாத்தியப்பட்ட விவசாயிகளும், மக்களும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. விவசாயம் அல்லாத பகுதியில் அங்கிருக்கும் இளைஞர்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் இது போன்ற வேலைகளைக் கையில் எடுக்கலாம்.

சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வண்டலூர் மற்றும் காரணை புதுச்சேரி கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபையைக் கூட்டினார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மீதான சமூக தணிக்கை தொடர்பான கூட்டம் அது. மக்கள் பங்களிப்புடன் நடக்கும் திட்டங்களை மக்களே தணிக்கை செய்வதுதான் சமூக தணிக்கை. சமூக ஆய்வு என்றும் கொள்ளலாம்.

குடிமராமத்துத் திட்டமும் மக்கள் பங்களிப்புடன் நடக்கும் திட்டம்தான். எனவே, தங்களது கிராமத்தில் உள்ள நீர்நிலைகளைச் என்ன சீரமைக்க அந்த ஊரின் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், பெரியவர்கள் ஒரு குழுவாகத் திரண்டு கிராமப் பஞ்சாயத்தின் செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தும்படி எழுத்துபூர்வமாக வலியுறுத்தலாம். அவர்கள் மறுக்கும்பட்சத்தில் செயல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். இதை இன்னும் விரிவாக சொல்கிறேன்.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x