மதுரை: காய்கறிகளை விற்பனைக்கு அனுப்ப குதிரை சவாரி
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விளையும் காய்கறிகளை விற்பனைக்காக அடிவாரத்துக்கு அனுப்ப போக்குவரத்து வசதி இல்லாததால் குதிரைகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இந்த ஹைடெக் காலத்திலும் கொடைக்கானல் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு அனுப்ப குதிரைகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் தாலுகாவில் 18,600 ஹெக்டேரில் காய்கறிகள், மலர்கள், பழங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இப்பகுதி விளைநிலங்கள் மலையடிவார சரிவு நிலங்களாக உள்ளதால் வேளாண் பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுவதில்லை. தோட்டக்கலை பயிர்களை மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் 50 சதவீத மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லை. சாலை வசதியிருந்தால் பஸ் போக்குவரத்து கிடையாது. கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் விவசாயத் தோட்ட வேலைகளுக்கு மினி லாரிகள், ஜீப்களில் சென்று வருகின்றனர்.
பணக்கார விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை லாரிகள், மினி வேன்கள், ஜீப்களில் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் சிறு, குறு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த நடைமுறைபோல் குதிரைகளில் ஏற்றி அனுப்புகின்றனர். குதிரை ஓட்டிகள், காய்கறி மூட்டைகளை, மலைப்பாதைகள் வழியாக கொடைக்கானல் மற்றும் அடிவாரப்பகுதிகளுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். வியாபாரிகள், அவற்றை உள்ளூர் சந்தைகள் மற்றும் திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை காய்கறி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
குதிரைகளில் ஒருமுறை காய்கறிகளை மேல் மலையில் இருந்து கீழே கொண்டு வர ரூ.300 முதல் 500 வரை கி.மீ.க்கு தகுந்தவாறு வாடகை வாங்குகின்றனர். அதனால், கொடைக்கானலில் போக்குவரத்து வசதி, சாலை வசதியில்லாத கிராமங்களில் கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய குதிரைகள் முக்கிய போக்குவரத்து வாகனமாக கைகொடுத்து வருகிறது.
இது குறித்து மேல்மலையைச் சேர்ந்த குதிரை ஓட்டி பார்கவி கூறும்போது, மலைக்கிராமங்களில் விவசாயிகள் ஏற்றிவிடும் காய்கறிகளை தினசரி மலைப்பாதைகளில் குறுக்குவழியாகக் கொண்டு வந்து அவர்கள் கூறும் வியாபாரிகளிடம் ஒப்படைப்போம். வியபாரிகள், அவற்றை அடிவாரத்தில் ஏலம் விடுவார்கள். சில குதிரை ஓட்டிகள் கொண்டு வந்து ஒப்படைக்கும் மொத்த காய்கறிகளையும் லாரிகளில் வெளியூர் விற்பனைக்கு அனுப்புவார்கள் என்றார்.
