

கோவையில் எத்திலின் பவுடர், கார்பைடு கற்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 5.5 டன் பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோடைக்காலம் தொடங்கு வதை ஒட்டி தென் மாநிலங்களில் மாம்பழ விளைச்சல் அதிகரித் துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளத்தில் இருந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடையாகும் மாம்பழங்கள் நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டு செல்லப் படுகின்றன. கேரளத்தை ஒட்டியுள்ள கோவைக்கும் விற்பனைக்காக அதிகளவில் மாம்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சீசனைப் பயன்படுத்தி ரசாயனப் பொருட்கள் மூலமாக மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக, கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதிலும் குறிப்பாக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எத்திலின் பவுடர்களைப் பயன்படுத்தி வேகவேகமாக பழங்கள் பழுக்க வைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கோவை உக்கடம், கருப்பகவுண்டர் வீதி ஆகிய இடங்களில் 15-க்கும் மேற்பட்ட கடைகளிலும், 2 குடோன்களிலும் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஒட்டுமொத்தமாக 5 டன் மாம்பழங்களும், 500 கிலோ சப்போட்டா பழங்களும் எத்திலின் பவுடர் மற்றும் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், ரசாயன முறையில் பழங்களை பழுக்க வைத்தவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. அடுத்தமுறை இதேபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய் கூறும்போது, ‘வழக்கமாகவே மாம்பழ சீசன் என்றால் கார்பைடு கற்கள் மூலமாக பழங்கள் பழுக்க வைக்கப்படுவது நடக்கும். ஆனால், கோவையில் முதன்முறையாக சீனாவில் இருந்து வாங்கிவரப்படும் எத்திலின் பவுடர்கள் பயன்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழங்களில் இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் வயிற்றுப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றார்.