Published : 26 Sep 2016 03:22 PM
Last Updated : 26 Sep 2016 03:22 PM

ரயில்களில் பொதுப்பெட்டிகளை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் குறைந்த கட்டணம் கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி, ஏழை பயணிகளின் உரிமைகளையும், வசதிகளையும் பறிக்கும் செயலில் இந்திய ரயில்வே துறை ஈடுபட்டிருக்கிறது. சென்னையிலிருந்து இயக்கப்படும் இரு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மேலும் ஒரு வண்டியில் குறைக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரயில்களில் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி வகைப் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை - மதுரை இடையிலான பாண்டியன் அதிவிரைவு ரயிலில் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் இப்பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பெட்டிகள் வழக்கமான பெட்டிகளை விட அதிக இருக்கைகளும், நீளமும் கொண்டவை என்பதால், ஒரு ரயிலில் வழக்கமான 24 பெட்டிகளுக்கு பதில் 22 பெட்டிகளை மட்டுமே இணைக்க முடியும்.

அதனால் பாண்டியன் விரைவு வண்டியில் இருந்த 4 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 2 ஆக குறைக்கப்பட்டு விட்டது. இவற்றில் மகளிருக்கான பெட்டியும், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வசதி கொண்ட பெட்டியும் அடங்கும்.

வழக்கமாக ஒரு பெட்டியில் 90 பேர் வீதம் 4 பெட்டிகளில் 360 பேர் பயணிக்க முடியும். இவர்கள் தவிர மேலும் பலர் இப்பெட்டியில் பயணம் செய்வார்கள். ஆனால், இப்போது ஒரு பெட்டிக்கு 100 பேர் வீதம் இரு பெட்டிகளில் 200 பேர் மட்டுமே பயணிக்க முடிகிறது. மகளிருக்கென தனிப் பெட்டி இல்லாததால் அவர்கள் ஆண்களுடன் நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது.

அதேபோல், சென்னை-மங்களூர் விரைவு வண்டியில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டு விட்டது. சென்னை-திருச்சி இடையிலான மலைக்கோட்டை விரைவு ரயிலில் இன்று முதல் எல்.எச்.பி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதனால் அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாக குறைக்கப்படுகிறது.

அதிக இடவசதி உள்ளிட்ட சொகுசு அம்சங்கள் கொண்ட எல்.எச்.பி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். அதேநேரத்தில், அதனால் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை ரயில்வே துறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒரு ரயிலில் முன்பதிவு பெட்டிகள் 10 இருந்தால் ஒரு பெட்டிக்கு 72 படுக்கைகள் வீதம் மொத்தம் 720 படுக்கைகள் இருக்கும். அவற்றுக்குப் பதில் புதிய வகை பெட்டிகளை இணைக்கும் போது, ஒரு பெட்டியில் 80 படுக்கை இருக்கும் என்பதால் 9 பெட்டிகளை இணைத்தாலே போதுமானது. அவ்வாறு செய்யாமல் ஏழை மக்கள் பயணிக்கும் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது அநீதி.

மொத்தம் 4000 எல்.எச்.பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் ஓடும் அனைத்து விரைவு வண்டிகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதனால் தமிழகத்தில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறையும். அதன்பின் ஏழைகளும் அதிக கட்டணம் செலுத்தி முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மற்றொருபுறம், கன்னியாகுமரி - டெல்லி இடையிலான திருக்குறள் அதிவிரைவுரயில், சென்னை- ஹைதராபாத் கச்சிகுடா விரைவுரயில், சென்னை- மானாமதுரை சிலம்பு விரைவுரயில் ஆகியவற்றில் முன்னறிவிப்பின்றி தலா ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக குளிரூட்டி வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே துறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ''இந்தியாவில் ஓடும் 10,000 விரைவு வண்டிகளில், தலா 1 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும். அதன்மூலம் ஓராண்டில் 10 லட்சம் கூடுதல் படுக்கைகள் இணைக்கப்படும்'' என்று அறிவித்தார். ஆனால், அதற்கு மாறாக ஏழைகள் பயணிக்கும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

ரயில்வே துறையை மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக பார்க்காமல் பணம் குவிக்கும் துறையாக அரசு பார்க்கத் தொடங்கியிருப்பது தான் இதற்கு காரணமாகும். ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகியவற்றில் 90% படுக்கைகளுக்கு 50% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதும், மற்ற வண்டிகளில் சாதாரண பெட்டிகளை அகற்றிவிட்டு, அதிக கட்டணம் கொண்ட குளிரூட்டி வசதியுள்ள பெட்டிகளை இணைத்து வருவதும் இதை உறுதி செய்கின்றன. இதே நிலை நீடித்தால் ரயில் என்பது பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக மாறிவிடும்.

எனவே, அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் குறைந்த கட்டணம் கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ விரைவுவண்டிகளின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x