

திண்டுக்கல் கவுன்சிலர் மதுரை அழகர்கோவில் வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் பழிவாங்க நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கரட்டழகன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான இவர் மீது பல கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்றவர்.
2012 ஜனவரி 10-ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7-வது குற்றவாளி இந்த முத்துப்பாண்டி.
பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய சுபாஷ் பண்ணை யாருக்கு உதவி செய்ததால், இவர் மீது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் 2013 மார்ச் மாதம் திண்டுக்கல் நீதிமன் றத்துக்கு பின்புறம் சென்று கொண்டிருந்தபோது முத்துப் பாண்டி வாக னத்தின் மீது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் வெடி குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்ட வசமாக முத்துப் பாண்டி உயிர் தப்பினார்.
இதையடுத்து ஏப். 14-ம் தேதி மாலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நான்கு பேருடன் மதுரை அழகர்கோவிலுக்கு வந்த முத்துப்பாண்டி கோயில் வளாகத்திலேயே தங்கினார்.
அதிகாலையில் எழுந்து, வெளிப்பகுதியில் கழிப்பறை செல்ல நடந்து சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்துப்பாண்டி, அவருடன் இருந்த கண்மணி, தாமரைச்செல்வனை ஆகியோரை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றது. இதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கண்மணி, தாமரைச்செல்வன் ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த எஸ்.பி. விஜயேந்திரபிதாரி மற்றும் போலீஸார் சம்பவ இடத் துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் அப்பன்திருப்பதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிவாங்கவே முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இதுதொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளரான நடராஜன் என்பவரைத் தேடி வருகிறோம். இவரது தந்தை பெரியசாமியை, 2007-ம் ஆண்டு முத்துப்பாண்டி காரை ஏற்றி கொலை செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. எனவே நடராஜனை பிடிக்க முயற்சித்து வருகிறோம் என்றனர்.
மு.க அழகிரிக்கு ஆதரவு தெரிவித்தவர்:
கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டி திண்டுக்கல் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். முதலில் ஜான்பாண்டியனின் ஆதரவாளராக இருந்த இவர், அதன்பின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் இருந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறி தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே ஜன.27-ம் தேதி தனது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் மதுரை வந்து, திமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டலச் செயலாளர் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதன் மூலம் மு.க.அழகிரியின் ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டார்.