

மதுரை வைகை ஆற்றில் இன்று (புதன்கிழமை) காலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கினார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது. ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பரவசம் அடைந்தனர்.
முன்னதாக, இதற்காக கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து அழகர் மதுரை புறப்பட்டார்.
மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகருக்கு பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் முன் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து இரவு 7 மணியளவில் மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி மதுரையை நோக்கி புறப்பட்டார்.
கள்ளந்திரி, அப்பன்திருப்பதி என வழிநெடுகிலும் அமைக்கப் பட்டிருந்த மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவில் கடச்சனேந்தல் வந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் மதுரை நோக்கி அழைத்து வந்தனர்.
அதிகாலை மூன்றுமாவடி வந்தடைந்தார். அங்கு விடிய, விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை தொடங்கியது. சர்க்கரை நிரப்பிய வாழை இலை சுற்றப்பட்ட செம்பில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
பின்னர் மாலையில் தல்லாகுளம் அவுட் போஸ்ட் அம்பலகாரர் மண்டகப்படி வந்தடைந்தார். பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி சென்ற கள்ளழகர் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடைந்தார்.
திருமஞ்சனமாகி சிறப்பு பூஜைகளுக்குப் பின் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்தபடி கோயிலை சுற்றிவந்து பக்தர்களுக்கு சேவை அளித்தார்.
பின்னர் இன்று காலை 6.30 மணியளவில் அழகர் ஆற்றில் இறங்கினார்.
படங்கள்: ஒய். ஆண்டனி செல்வராஜ்
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி மூலமும் குழந்தைகள், பெண்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தென் மண்டல ஐஜி முருகன், மதுரை மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், எஸ்பி விஜயேந்திரபிதாரி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.