சென்னை பெருநகரம், திருச்சி மாநகரில் டிஜிட்டல் மயமாகிறது காவல்துறை வானொலி தொடர்பு
தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை பெருநகரம், திருச்சி மாநகரில் காவல்துறையின் வானொலி தொடர்புகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.
தமிழக காவல்துறையில் தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய சாதனமாக வாக்கி- டாக்கி என அழைக்கப்படும் வயர்லெஸ் வானொலிகள் பயன் படுத்தப்படுகின்றன. இதற்காக ஆங்காங்கே தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ‘அனலாக் விஎச்எப்’ முறையில் தற்போது தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
இதுதவிர காவல்துறை மட்டு மின்றி மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துக் கழக பணி யாளர்களும் விஎச்எப் முறையி லான தகவல் தொடர்பு வானொலிகளைப் பயன்படுத்து கின்றனர். இதனால் எதிர்பாராத அலைவரிசை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒன்றுக்கொன்று குறுக்கிட வாய்ப்புள்ளது. மேலும் காவல்துறையின் தகவல் பரிமாற்றத்தை பிறர் இடைமறித்து கேட்கவும் வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க, தமிழக காவல்துறையின் வானொலி தொடர்புகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம், முதற்கட்டமாக சென்னை பெருநகர, திருச்சி மாநகர காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை, திருச்சியில் தொலைத்தொடர்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறை போன்றவை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: காவல்துறையில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட, இரைச்சலற்ற, விரைவான, தெளிவான உரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்த (DIGITAL BASED POLICE RADIO SYSTEM APCO-P25) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், தற்போது இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சி, மேம்பாட்டைக் கொண்டு இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை, திருச்சியில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. சென்னையில் வண்டலூர், பல்லாவரம், மதுர வாயல், செம்பியம், ஆவடி, மணலி ஆகிய இடங்களில் இதற்கான பிரதான தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 30 ‘ரிப்பீட்டர்கள்’ மூலம் 1200 சதுர கி.மீ.தூரத்துக்கு துல்லியமான அலைவரிசை அளிக்கப்பட உள்ளன.
அதேபோல, திருச்சியில் மலைக் கோட்டை மீது தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து, அங்கிருந்து பெறப்படும் அலைவரிசையை பெற்று கே.கே.நகர், கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் 250 சதுர கி.மீ.தூரத்துக்கு தெளிவான அலைவரிசை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டன. கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.
இத்திட்டத்தின்படி சென்னை பெருநகர, திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க வயர்லெஸ் வானொலிகள், காவல் நிலையங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தக்கூடிய நிலையான வயர்லெஸ் வானொலிகள் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் மாற்றப்படும். அவற்றுக்கு பதிலாக எல்இடி டிஸ்பிளே, டிஜிட்டல் சவுண்ட், அவசர அழைப்புக்கான பொத்தான் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.
தற்போதுள்ள வயர்லெஸ் வானொலியில் ஒருவர் பேசினால், அத்தகவல் அந்த அலைவரிசையிலுள்ள அனை வருக்கும் கேட்கும். ஆனால், புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டால் கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் ஒருவர் மற்றொரு தனி நபருக்கோ, அல்லது ஒரு சரகத்தில் மட்டும் உள்ள குழுவினரை மட்டும் தேர்வு செய்தோ பேச முடியும். பேச்சு தெளிவாகக் கேட்கும். உரையாடல் பாதுகாப்பானதாக இருக்கும். சென்னை, திருச்சியில் சுமார் 90 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் முடிந்தபின், மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றனர்.
