Published : 08 Mar 2014 09:30 AM
Last Updated : 08 Mar 2014 09:30 AM

ரவுடி பின்னணியில் எம்.பி., வில்லன் நடிகர்- ரூ. 10 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

ஹோட்டல் அதிபரிடம் ரூ.10 கோடி நூதன மோசடியில் மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் பின்னணியில், எம்.பி. ஒருவரும், சினிமா வில்லன் நடிகரும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ராஜன்பாபு என்பவர் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடன் நெருக்கடியில் இருந்த இவரிடம் மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த ரவுடி செல்வம், அவரது கூட்டாளிகள் 10 பேர் சேர்ந்து வட்டிக்குப் பணம் தருவதாகக் கூறி ரூ.10 கோடி மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீஸார், வரிச்சியூர் செல்வம் உள்பட 10 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். கைதான வரிச்சியூர் செல்வத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும், சினிமா வில்லன் நடிகருடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களை கொடைக்கானலுக்கு அழைத்து வந்து, சட்டவிரோத காரியங்களை வரிச்சியூர் செல்வம் செய்துள்ளார்.

அதற்காக கொடைக்கானலில் நிரந்தரமாக ஒரு ஹோட்டல் தேவைப்பட்டதாம். அதனால், கடனில் தத்தளித்த ராஜன்பாபுவின் ஹோட்டலை அபகரிக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

வரிச்சியூர் செல்வத்துடன் கைதான திண்டுக்கல் சீலப்பாடி ஜி.கே.நகரைச் சேர்ந்த தரகர் செல்வகணேஷ், என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த தனபாக்கியம் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

திண்டுக்கல், கொடைக்கானல், பழநி, மதுரை ஆகிய இடங்களில் பல தொழில் அதிபர்கள், வரிச்சியூர் செல்வத்தால் ஏமாற்றப்

பட்டு, மிரட்டப்பட்டு சொத்துகளை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

வரிச்சியூர் செல்வம், அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்ட

வர்கள் பட்டியலைச் சேகரிக்கும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். செல்வத்தின் சொத்துகள், வங்கிக் கணக்கு களை முடக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x