

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய சட்டப்பேரவை காங். கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ‘‘தமிழகத்தில் நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக சில விஷயங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம். வெளியில் இருந்து வரும் தகவல்கள் ஏற்புடையதாக இல்லை. நல்லாட்சி தொடர வேண்டும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்றார்.
அப்போது அமைச்சர்களும், அதிமுக உறுப்பினர் களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து பேசிய கே.ஆர்.ராமசாமி, தடை செய்யப் பட்ட போதை பொருள்கள் விவகாரத்தை எழுப்ப முயன்றார். அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். அதனைக் கண்டித்து ராமசாமி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் பேரவைக்கு திரும்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதிமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலை யில், அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் ராமசாமி ‘நல்லாட்சி தொடர அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.