இடஒதுக்கீட்டை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும்: திருமாவளவன்

இடஒதுக்கீட்டை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும்: திருமாவளவன்
Updated on
1 min read

இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக்கொள்ளும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூகநீதியில் அக்கறைவுள்ள அனைத்து இயக்கங்களும் முன்வரவேண்டுமென திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: "இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

மண்டல் குழு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக் கூடாது என கூறப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் இந்த 50 விழுக்காட்டு வரம்பை உறுதிப்படுத்தியுள்ளன.

அதை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் இயற்றப்படாத நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த அந்த வரம்பே தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாக விளங்குகிறது.

இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு அதிகமாக தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டபோது அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா இடஒதுக்கீடு தொடர்பான தமிழக சட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்பொருட்டு அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கச் செய்தார்.

ஆனால், 2007ஆம் ஆண்டு சனவரி 11ஆம் நாள் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1973ஆம் ஆண்டுக்குப் பிறகு 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து ரத்து செய்யலாம் என்று கூறிவிட்டது.

அதன் விளைவாக, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டத்திற்கு இருந்த பாதுகாப்பு பறிக்கப்பட்டு விட்டது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனத்தில்கொண்டு இந்தச் சட்டத்தைப் பாதுகாத்திடவும் சமூகநீதியைக் காப்பாற்றிடவும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசையும், சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட இயக்கங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் 9வது அட்டவணை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். இந்தக் கருத்துக்களை வலியுறுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்" இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in