Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

அடிக்கடி பொலிவிழக்கும் மெரினா கடற்கரை: கோடிக்கணக்கில் வீணாகும் மக்கள் வரிப்பணம்- முறையான பராமரிப்பு இல்லை என புகார்

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அழகுபடுத்தப்படும் மெரினா கடற்கரையை, மாநகராட்சி சரியாக பராமரிக்காததால், புல்வெளிகள் அடிக்கடி சேதமாகின்றன. இதனால் பண விரயத்துடன் கடற்கரை அழகும் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரை, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது. சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. காற்று வாங்கவும், குடும்பத்துடன் பொழுதை கழிக்கவும் நாள்தோறும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். கோடைகாலங்களில் இது 50 ஆயிரத்தைத் தாண்டும்.

சென்னை கோட்டை முதல் பெசன்ட் நகர் வரை 13 கி.மீ. தூரமுள்ள மெரினா கடற்கரையை அழகுபடுத்தவும், மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவும் மாநகராட்சியும் பொதுப்பணித்துறையும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமார் 25.92 கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரை முழுவதும் அழகுபடுத்தப்பட்டன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்வெளிப் படுக்கைகள், பூச்செடிகள், நடைபாதைகள், வண்ண குழல் விளக்குகள் என பலவிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்ட மெரினா கடற்கரை பூங்காக்களை அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் சரியாக திட்டமிட்டு பராமரிக்கவில்லை. இதனால், பல கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தி அமைக்கப்பட்ட பூங்காக்கள், புல்வெளிகள் மற்றும் செடிகள் தொடர்ந்து பொலிவிழந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது மீண்டும் மெரினாவை அழகுபடுத்த 40 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தத் திட்டத்தில், மெரினாவிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆனால், மரக்கன்றுகளும் புல்வெளிகளும்கூட சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மரக்கன்றுகளுக்கு ஓரளவு தண்ணீர் விடும் மாநகராட்சியினர், புல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில்லை. இதனால் குளிர்காலத்திலேயே இந்தப் புல்வெளிகள் அழகிழந்து காணப்படுகிறது.

சமீபத்தில் காந்தி சிலை அருகில் நடந்த குடியரசு தின விழாவுக்காக, புல்வெளிகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது பார்வையாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அமர கேலரிகள் அமைக்கப்பட்டன. கேலரிகள் அமைக்கப்பட்ட பகுதி, தற்போது புற்களின்றி மண் தரையாகக் காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து, மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவரான சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், ‘‘திமுக ஆட்சியின்போது, 30 கோடி ரூபாய் வரை செலவு செய்து, மெரினாவை அழகுபடுத்தினோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக ஆட்சியில், அதை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. திமுக தலைவரின் பெயர் கொண்ட திறப்பு விழா கல்வெட்டையும் சிதிலமடையச் செய்துவிட்டனர். இதனால் மக்கள் பணம்தான் வீணடிக்கப்படுகிறது’’ என்றார்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘திமுக ஆட்சியிலும் இப்படித்தான் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டனர். ஆட்சிகள் மாறும் போது, மெரினாவைப் புதுப்பிக்கப் பல கோடி ரூபாய்க்கு புதிய திட்டம் வகுப்பது தொடர்கதையாகவே இருக்கிறது. இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசியல் கட்சிகள்தான் காரணம்’’ என்றார்.

மாநகராட்சி விளக்கம்

மாநகராட்சி உயரதிகாரிகள் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் அழகுபடுத்துவது தொடர்பாக சுமார் 17 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்தனர். ஆனால் புல்வெளிகள் அமைக்கின்ற பெயரில், அவர்கள் தரையில் முறையான தொழில்நுட்ப அடிப்படையில் மண், உரம் ஆகியவற்றை இடாமல், வெறும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டி, பெயரளவில் செய்து விட்டனர். அதனால்தான் புல்வெளியை பராமரித்தாலும், அதில் புல் சரியாக வளர்வது இல்லை. திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மெரினா அழகுபடுத்தும் பணி குறித்து, விசாரணை நடந்து வருகிறது. டெண்டரில் குறிப்பிட்டுள்ளதற்கு மாறாக இந்தப் பணி நடந்துள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x