Published : 25 Feb 2014 04:39 PM
Last Updated : 25 Feb 2014 04:39 PM

மதுரை: அம்மா விருது, அழகான குடை, ஆண்டுதோறும் பரிசு... முதல்வர் பிறந்தநாள் திட்டங்களாக மேயர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மதுரை மாநகராட்சியில் சிறந்த பணியாளர்களுக்கு அம்மா விருது, பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு அழகான குடை, அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பரிசு, அரசுத் தேர்வெழுத சிறப்புப் பயிற்சி என பல அறிவிப்புகளை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளையொட்டி மதுரை மாநகராட்சி கவுன்சில் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார். மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்து முதல்வர் பிறந்த நாளுக்கான சிறப்பு தீர்மானங்களை வாசித்துப் பேசியதாவது:

முதலிடம் பெறுவோருக்குப் பரிசு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் தலா ஒரு மாணவன், ஒரு மாணவிக்கும், அரசு மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளில் 10, 12-வது வகுப்பில் முதலிடம் பிடிக்கும் தலா ஒரு மாணவன், ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயரில் ரூ.5000 பரிசு மற்றும் நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

பணியாளர்களுக்கு அம்மா விருது

மதுரை மாநகராட்சியில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அந்தந்த துறை வாரியாக சிறப்பாகப் பணியாற்றும் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலை உதவிப்பொறியாளர், மகப்பேறு உதவியாளர், தலைமையாசிரியர், ஆசிரியர், சமுதாய அமைப்பாளர், கண்காணிப்பாளர், வாகன ஓட்டுநர் உள்பட 30 பேரை கண்டறிந்து அவர்களுக்கு ‘அம்மா விருது’ மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். சுகாதார ஊழியர்களில் மட்டும் ஆண், பெண் மண்டலத்திற்கு ஒருவர் என 8 பேர் தேர்வு செய்யப்படுவர்.

அரசுத் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி

குரூப் 2, குருப் 4 தேர்வுகளுக்குத் தயாராக மதுரை மாநகராட்சி வளாகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பயின்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காக மதுரை மாநகராட்சி சார்பில் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தேர்வுகளில் வெற்றி பெறும் அனைவருக்கும் நன்மதிப்பு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

பிளஸ் 2 படிப்போருக்கு குடை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் 2566 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்குச் செல்லும்போது வெயில், மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் 2566 மாணவ, மாணவிகளுக்கும் அழகான சிறுகுடை வழங்கப்படும் என்றார்.

பின்னர் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய கொள்கை வகுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கிவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ் (அதிமுக), ஆர்.சுந்தர்ராஜன் (தேமுதிக அதிருப்தி), ஆர்.அண்ணாத்துரை (மா.கம்யூ) சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு முதல்வரை வாழ்த்திப் பேசினர். மேலும் மாநகராட்சி கவுன்சிலர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x