Published : 30 Jul 2016 03:03 PM
Last Updated : 30 Jul 2016 03:03 PM

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திரா: வைகோ கண்டனம்

ஆந்திரா தொடர்ச்சியாக பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்கு உரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து வருகிறது. ஆந்திர மாநில எல்லையான, வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரில் தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 15 அடி அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கட்டுமானப் பணிகளை முடித்து இருக்கின்றது. இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் - பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறபோதும், நீர் வரத்து குறைந்துவிட்டது.

ஆந்திர மாநிலத்தின் அடாவடித்தனத்தால் பாலாறு பாழாகும் நிலை ஆகிவிட்டதே என்ற வேதனையில், வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீனு புல்லூர் தடுப்பு அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

பாலாற்றின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளின் கொந்தளிப்பான மனநிலைக்கு, விவசாயி சீனுவின் மரணம் ஒரு சான்று ஆகும். விவசாயி சீனுவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், தமிழக அரசு ரூ.20 லட்சம் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டும் நடவடிக்கையில் ஆந்திரா இறங்கி உள்ளது. 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜங்குமண்டா வனப்பகுதியில் பெய்யும் மழைநீர், துணை ஆறாக ஓடி பாலாற்றிற்கு சென்றடைகிறது. இங்கு தடுப்பணை கட்டுமானப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கி உள்ளது. பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆந்திரா தொடர்ச்சியாக பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்கு உரியது.

தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் முந்தி நிற்கும் மத்திய பாஜக அரசு, பாலாற்றில் தடுப்பணை அமைக்கும் ஆந்திராவின் நடவடிக்கைகளை எப்போதும்போல வேடிக்கைப் பார்த்து வருவதும் கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கைத் தூரிதப்படுத்தி பாலாற்றில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x