முறைகேடாக பத்திரப்பதிவு: நீலாங்கரை சார்-பதிவாளரை கைது செய்ய உத்தரவு

முறைகேடாக பத்திரப்பதிவு: நீலாங்கரை சார்-பதிவாளரை கைது செய்ய உத்தரவு
Updated on
1 min read

முறைகேடாக பத்திரப் பதிவில் ஈடுபட்ட நீலாங்கரை சார்-பதிவாளரை 48 மணி நேரத்தில் கைது செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சுபிதா(40). இவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரில், ‘‘என் தந்தைக்கு சென்னை, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகள் உள்ளன. அவர் கடந்த 2015 அக்டோபரில் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது கைவிரல் ரேகையை பதிவு செய்து, அவரது சொத்துகள் அனைத்தையும் என் தாயார் மாரியம்மாள், சகோதரர் சக்திகுமார் ஆகியோர் அபகரித்துக் கொண்டனர். அந்த ஆவணங்கள் மூலம் எனது தந்தை அங்கு செல்லாமலேயே 2015 அக்டோபர் 9-ம் தேதி நீலாங்கரை சார் பதிவாளர் அவர்களது பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதில் மோசடி நடந்துள்ளது. அதற்கு சார்- பதிவாளரும் உடந்தை” என அதில் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் போலீஸார் நீலாங்கரை சார்- பதிவாளர் தாமு உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சக்திகுமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது சிவில் வழக்கு என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சக்திகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், ‘‘ இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீலாங்கரை சார்- பதிவாளரான தாமு, தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அந்த பத்திரப்பதிவு இறந்தவரின் வீட்டில் வைத்து நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில், பத்திரப்பதிவு முறைகேடாக பத்திரப்பதிவு அலுவலகத்தில்தான் நடந்துள்ளது’’ என்றார்.

அதையடுத்து சார்-பதிவாளரை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய போலீஸாருக்கு வாய்மொழியாக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 24-க்கு தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in