

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி ரோதம் கிளின்டன் வேட்பாளராகி யுள்ளார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றதற்காக எனது வாழ்த்துகள். உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு இது மிகுந்த பெருமையாகவும், மன நிறைவு அளிப்பதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம்காணும் 2 முக்கிய கட்சிகளில் ஒன்றின் வேட்பாளராக முதல்முறையாக பெண் நிறுத்தப்படுவது பெருமையாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அதிகார நிலை அடைவதற்கான நம்பிக்கையாகவும், அவர்களுக் கான குரலாகவும் நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நீங்கள் சென்னை வந்ததை நான் நினைவு கூர்கிறேன். அன்று மாநிலத்தின் செயலராக தாங்கள் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தீர்கள். வரும் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் உங்கள் பிரச்சாரம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல எனது வாழ்த்துகளும் உங்களுடன் இருக்கும். அரசியலில் நீங்கள் உச்சத்துக்கு செல்லும் போது, உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு நீங்கள் சிறந்த முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.