

மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
2017 18-ம் ஆண்டில் ரூ.85 கோடி செலவில் மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடை காலத் தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் தொடர்ந்து வழங்கப்படும்.
தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், தமிழ்நாடு மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை 2,700 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களித்து இயந்திர மீன்பிடிப் படகு ஒன்றுக்கு வழங்கப்படும் டீசலின் அளவை ஓர் ஆண்டுக்கு 15,000 லிட்டரிலிருந்து 18 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு ஒன்றுக்கு வழங்கப்படும் டீசலின் அளவை ஓர் ஆண்டுக்கு 3,600 லிட்டரிலிருந்து 4 ஆயிரம் லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இயந்திரம் பொருத்தாத நாட்டுப் படகு ஒன்றுக்கு லிட்டருக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவும் ஒர் ஆண்டுக்கு 3 ஆயிரத்திலிருந்து 3,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கை அரசால் படகுகள் கைப்பற்றப்பட்டு பாதிக்கப்பட்ட 18 மீனவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் 90 லட்சம் ரூபாயை ஒரு சிறப்பு உதவியாக வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில் 113.90 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிக்காக 171.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கோடி செலவில் கடல் அரிப்பை தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மீன் வளத்துறைக்கு மட்டும் ரூ.768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.