

மதுரை கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழிப் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கிரேக்கம், ரோமாபுரி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தமிழர்களுக்கு இருந்த வர்த்தகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வைகை நதிக்கரையில் நகர நாகரீகம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நிலைபெற்றிருந்ததை உறுதி செய்வதாக கீழடி அகழ்வாய்வு அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும் குடியிருப்புகள் மட்டுமின்றி பெரும் தொழிற்சாலை இயங்கி வந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. மூடிய வடிகால்கள், சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட வாய்க்கால்கள், திறந்த வடிகால்கள் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.
கடந்தாண்டு அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மைசூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டன. இந்தாண்டு கிடைத்த பொருட்களும் விரைவில் கொண்டுசெல்லப்பட உள்ளன.
கீழடி அருகில் அருங்காட்சியகம் அமைத்தால் இந்தப் பொருட்களை இங்கேயே வைத்து பாதுகாப்பதோடு வருங்காலத் தலைமுறை, பழந்தமிழர் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். இதற்கு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு கீழடிக்கு அருகில் தேவைப்படுகிறது.
ஆனால், இதுவரை தமிழக அரசு இதற்கான இடத்தை ஒதுக்கித்தரவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அருங்காட்சியகத்திற்கான இடத்தை ஒதுக்கித்தரவேண்டும்.
மேலும், 110 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சென்ட் நிலப்பரப்பில்தான் அகழ்வாய்வு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் அகழ்வாய்வைத் தொடரவும் இதே போல வாய்ப்புள்ள இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ளவும் கிடைத்துள்ள பொருட்களின் காலத்தை கணிப்பதற்கான ஆய்வுகளுக்கும் உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.