Published : 08 Aug 2016 04:38 PM
Last Updated : 08 Aug 2016 04:38 PM

புதிய கல்விக் கொள்கை அறிக்கைக்கு எதிராக சட்டப் பேரவையில் தனித் தீர்மானம்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சமூகநீதிக்கு பேராபத்தை ஏற்படுத்தும் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

''புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பழைய குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கல்விக்கொள்கையை கொண்டுவர சாத்தியம் இல்லை. சமூக நீதிக்கு சவால் விடும் வகையில் எப்படியாவது புதிய கல்விக்கொள்கையை கொண்டுவந்துவிட வேண்டும் என்று பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மதம், மொழி, இனம் என பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்தியாவில் இந்த புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தினால், அது சமூகநீதிக்கு பேராபத்தை ஏற்படுத்தும். சமூகநீதி, தமிழ்மொழி, மதச்சார்பின்மை இம்மூன்றையும் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். எந்த காலத்திலும் தமிழ்மொழிக்கு பின்னடைவு ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை நடைமுறைக்கு வந்தால், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை பறிக்கப்படும். இனிமேல் 4-ம் வகுப்பு வரை மட்டுமே இலவச கல்வி வழங்கப்படும். பழைய குருகுல வேத கல்வி முறை கொண்டுவரப்படும். இதனால், தமிழ் மொழி பின்னுக்கு தள்ளப்பட்டு சமஸ்கிருதம் முன்னிலை பெறும்.

மாணவர்கள் தகுதித்தேர்வுகளில் வெற்றிபெற்றால் மட்டுமே மேற்படிப்புக்குச் செல்ல முடியும். ஆசிரியர் நியமன விதிமுறைகளை மத்திய அரசு முடிவு செய்யும். 14 வயது வரை கட்டாய இலவச கல்வி இனிமேல் இருக்காது. இவைபோன்ற பல விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும். இதற்கெல்லாம் இடம்கொடுக்காமல் இந்த விஷயத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், அதன் மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இனியும் காலதாமதமானால் திமுகவே தனித் தீர்மானம் கொண்டுவரும்'' என்று ஸ்டாலின் பேசினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x