Published : 20 Apr 2017 08:21 AM
Last Updated : 20 Apr 2017 08:21 AM

படூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பள்ளி சீருடையில் 7 வயது சிறுவன் போராட்டம்

படூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த 132 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், 7 வயது சிறுவன் கடையின் முன்பு படிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் குடியிருப்புகள் நிறைந்த காலனி பகுதியையொட்டி அரசு டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. கடையை திறப்பதற்கு முன்பே அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடை திறக்கப்பட்டதால் கடந்த 15-ம் தேதி இரவு கிராம மக்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால், அரசு சொத்தை சேதப்படுத்தியதாக 60 பெண்கள் உட்பட 132 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுவுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் ஆகாஷ்(7) என்ற சிறுவன், படூர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடையின் முன்பு அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.

சிறுவன் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் அறிந்த கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் திருப் போரூர் வட்டாட்சியர் விமல் குமார் ஆகியோர் டாஸ்மாக் கடை பகுதிக்கு சிறுவன் வருவதற்கு முன்பே வந்தனர். ‘குடியை விடு, படிக்க விடு’ என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் சிறுவன் அச்சாலைக்கு வந்ததும், வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், ‘டாஸ்மாக் கடை இன்னும் திறக்கப்படவில்லை.மேலும், படிக்கும் வயதில் போராட்டங்களில் ஈடுபடாமல் பள்ளிக்குச் செல்லுங்கள்’ என வட்டாட்சியர் அறிவுரை கூறினார். ஆனால், ‘டாஸ்மாக்கை திறக்கமாட்டோம் என உறுதி கூறினால் திரும்பிச் செல்வதாக’ சிறுவன் கூறினான். வட்டாட்சியரும் கடை திறக்கப்படாது எனத் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்து திரும்பிய சிறுவன் டாஸ்மாக் கடை உள்ள சாலையின் கடைசிப் பகுதிக்கு சென்று சாலையில் அமர்ந்து சுமார் 3 மணி நேரம் படிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மீண்டும் வட்டாட்சியர் மற்றும் போலீஸார் பேச்சு நடத்தி கடை திறக்கப்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து, கடையை திறந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என அதிகாரிகளிடம் தெரிவித்து சிறுவன் திரும்பிச் சென்றான். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, திருப்போரூர் வட்டாட்சியர் விமல்குமாரிடம் கேட்டபோது, ‘போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிறுவனை அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தோம். படூரில் நிலவும் சூழ்நிலை குறித்து டாஸ் மாக் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x