Last Updated : 09 Mar, 2015 08:12 AM

 

Published : 09 Mar 2015 08:12 AM
Last Updated : 09 Mar 2015 08:12 AM

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் இலங்கை பயணம்: பிரச்சினைகளுக்கு மோடி தீர்வு காண்பாரா?- தமிழர், மீனவர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்குச் செல்கிறார். இதில், அவரது இலங்கை பயணம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 13-ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

1987-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ராஜீவ் காந்தி இலங்கை சென்றார். அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த பயணம் அரசியல் தலைவர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், வடக்கு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதாக முன்னாள் அதிபர் ராஜபக்சவும், இப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை தலைவர்களை அவர் வலியுறுத்த வேண்டும்.

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம்தான் தீர்வு எனும்போதிலும் ஈழத் தமிழர்கள் அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

போர் பாதித்த பகுதிகளில் தமிழர்களுக்காக இந்திய அரசு கட்டித்தரும் வீடுகள் விரைவாக தமிழர்களிடம் ஒப்படைக்கப்படுவதையும், அவை சிங்களர்களுக்கு தாரை வார்க்கப்படாமல் இருப்பதையும் பிரதமர் உறுதி செய்ய வேண்டும். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்தும்படியும், இரு நாட்டு மீனவர்களும் வங்கக்கடலில் அமைதியாக மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும்படியும் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் வெற்றிகரமானதாக அமையும்.

கவிஞர் காசி ஆனந்தன்:

சிங்களப் படைகள் புடைசூழ, ராணுவக் காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் நின்றபடி, வெறுமனே மக்களைப் பார்த்துவிட்டு இந்தியப் பிரதமர் வந்துவிடக் கூடாது. யாழ்ப்பாணத்தில் ராணுவக் கட்டுப்பாட்டால் மக்கள்படும் துயரங்களைப் பார்த்தும் கேட்டும் அறிய வேண்டும்.

இதுவரை தமிழர்கள் வாழும் பகுதியில் 2,076 கோயில்கள் இடித்தழிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த வாரம் என்னோடு பேசிய தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் பகுதியில் 15 கோயில்களை தற்போது இடித்துவிட்டதாக கூறினார். இப்படியான ஏதோ வொரு வகையிலான தொடர் தாக்குதல்களைத் தமிழ் மக்கள் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊடகமொன்றில் நேர்காணல் அளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வடமாகாணத்துக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்க முடியாது என்றும், யாழ். மாகாண சபைத் தலைவர் ஒரு பொய்யர் என்றும் பேசியிருக்கிறார். இந்திய இலங்கை உடன்படிக்கை இருக்கிறபோதே இந்நிலையிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதமரின் இந்தப் பயணம் தமிழ் மக்களுக்கான சுய வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவதாகவும் அமைய வேண்டும்.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்:

இந்திய பிரதமரின் இலங்கைப் பயணம் குறித்து நமக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. பலமுறை சொல்லியும் இருக்கிறோம். பிரதமர் இந்தப் பயணத்தில் என்ன செய்கிறார் என்பதை பார்த்துவிட்டு, பிறகு என் நிலையை விரிவாக சொல்கிறேன்.

மீனவர்கள் எதிர்பார்ப்பு

மனோகர் (நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தின் பஞ்சாயத்தார்களில் ஒருவர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்): இருநாட்டு மீனவர்களுக்கும் இடையேயான பிரச்சினையைத் தீர்க்க 2 வழிகள் உள்ளன. ஒன்று இந்திய-இலங்கைக்கு இடையிலான கடற்பரப்பில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாரம்பரியமாக மீன் பிடித்து வந்ததுபோல இனியும் மீன் பிடிக்கலாம், அவர்களை கடற்படையினர் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று அறிவிப்பது. 2-வது நமது இழுவை வலைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமாவது பயன்படுத்த அனுமதிப்பது. பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து வாங்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இழுவை வலைகள் உள்ளன. குறிப்பிட்ட நாட்களில் அவற்றைக் கொண்டு மீன்பிடிக்க அனுமதி வாங்கித் தர வேண்டும்.

இந்த பயணத்தில் ஏதாவது ஒரு சுமுகமான முடிவை எட்டி அதன் மூலம் இனி மீனவர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியோடு அவர் இந்தியா திரும்ப வேண்டும்.

இந்திய கடற்பரப்பில் மீன் பிடிக்க அந்நிய நாட்டு மீன்பிடிக் கப்பலுக்கு அனுமதி வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்பதும் பிரதமரிடம் எங்கள் எதிர்பார்ப்பு. அதற்கு பதிலாக நவீன மீன்பிடி கருவிகளை கொடுத்து புதிய தொழில்நுட்பங்களை நமது மீனவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் எல்லை தாண்டாமல் நமது மீனவர்கள் மீன்பிடித்து தங்களையும் உயர்த்திக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x