திராவிட இயக்கங்களின் மெளனம் கவலை அளிக்கிறது

திராவிட இயக்கங்களின் மெளனம் கவலை அளிக்கிறது
Updated on
1 min read

மிகப் பெரிய அறிவு குறியீடான பெரியார் மீது பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தொடுக்காமல் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் மெளனம் காத்திருப்பது கவலை அளிக்கிறது என்று எழுத்தாளர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரை மரியாதைக் குறைவாக ஹெச்.ராஜா பேசியதாக வெளியான வீடியோ பதிவிற்கு எதிராக, வடசென்னை - தென் சென்னை மாவட்டங்களின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனக் கருத்தரங்கத்தை சென்னையில் நடத்தியது.

கருத்தரங்கில், தமுஎகச பொதுச்செயலரான எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா பேசியது பெரிய விஷயமல்ல. மிகப் பெரிய அறிவு குறியீடான பெரியார் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தொடுக்காமல், சம கால அரசியலில், பெரியாரின் கருத்தியலின் வாரிசாக தங்களைக் காட்டிக் கொள்கிற திராவிட இயக்கங்களின் தலைவர்கள் மெளனம் காத்திருப்பதுதான் கவலை அளிக்கிறது.

மத அடிப்படைவாத சக்தி, இன அடிப்படை வாத சக்தி ஆகிய இரு சக்திகளால் தாக்கப்படுகிற பெரியாரியம் என்கிற தத்துவம், வரலாறு முழுவதும் தாக்குதல்களைச் சந்தித்து வந்துள்ளது, சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெரியாரியம் என்கிற தத்துவத்தை நாம் முன்னெடுத்துச்செல்வது அவசியம் என்றார். பெரியார் பற்றி கடுமையான விமர்சனங்கள் வரும் போதெல்லாம் “என் கருத்துகள் என் எதிரிகளின் வழியாகத்தான் மக்களைப் போய் சேர்கிறது” என்று பெரியார் கூறியிருப்பதை சுட்டிக் காட்டினார் திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலர் விடுதலை ராஜேந்திரன்.

தமுஎகச செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு, வழக்க றிஞர் சிகரம் செந்தில்நாதன், தமுஎக மாநில துணைபொதுச் செயலர் இரா.தெ.முத்து, செயற்குழு உறுப்பினர் சுந்தரவள்ளி, தென் சென்னைமாவட்ட செயலர் கி.அன்பரசன், வடசென்னை மாவட்ட செயலர் ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in