

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட் படுத்தாமல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
நீலகிரி தவிர்த்து நாங்கள் போட்டியிடும் 39 தொகுதிகளில் 25-லிருந்து 30 இடங்களை எங்கள் கூட்டணி உறுதியாகப் பிடிக்கும்.
தமிழகத்தில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் பலனளிக்குமா?
நிச்சயமாக. தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் மக்கள் மாற்றத்தை காண விரும்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக எப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட் களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதுதான். பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்துவோம். எண்ணெய் நிறு வனங்களே விலை நிர்ணயம் செய்யும் முறையை நிறுத்துவோம்.
சூழல் கருதி அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி சேருவீர்களா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். 2011-ல் கொடுத்த வாக்குறுதி களை முழுமையாக இன்னும் நிறைவேற்றவில்லை. இதை நாங்கள் தட்டிக்கேட்டால் உரிய மரியாதையும் கொடுப்பதில்லை. தமிழகத்தில் பால், பேருந்து, மின்சாரக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. ஆனால், கூட்டணியில் உள்ள எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே, தமிழகத்திற்கு கேடானவர்தான் ஜெய லலிதா. அவர் சுயநலவாதியாக செயல் படுகிறார்.
மின்வெட்டு விவகாரம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்குமா?
கடுமையான மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழில்துறையும் நலிவடைந்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு களாகியும் மின்வெட்டு பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதனால், பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அரசிடம் மின்சாரம் பெறவும், அவர் சரியான அணுகுமுறையை கையாளவில்லை. எனவே, தேர்தலில் தமிழகத்தில் மின்வெட்டு விவகாரம் எதிரொலிக்கும்.
கூட்டணி தலைவர்கள் கலந்துகொள் ளும் கூட்டங்களில் பாமக நிறுவனர் ராம தாஸ் இதுவரையில் ஒரு கூட்டத் திலும் கலந்து கொள்ளவில்லையே? அவர் அதிருப்தியில் உள்ளாரா?
ராமதாஸ் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், வயதாகிவிட்டதால், பொதுக்கூட்டங் களில் அவரால் கலந்துகொள்ள முடிய வில்லை. வேறு எதுவும் காரணம் இல்லை. அக்கட்சியின் சார்பாக அன்பு மணி ராமதாஸ், ஜி.கே.மணி வந்து கலந்துகொள்கின்றனர். எனவே, இது பெரிய விவகாரமே கிடையாது.
தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-க்கள், தேமுதிகவில் தலைவர் விஜயகாந்தை விட, அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரின் அதி காரமே ஓங்கியுள்ளது என்கிறார்களே?
இது முற்றிலும் தவறான கருத்து. தலைவர் விஜயகாந்த் அசைவில்லாமல் ஒரு முடிவும் எடுக்கப்படாது. கட்சியின் முழு நடவடிக்கைகளை தலைவர்தான் கவனிக்கிறார். சுதீஷ் மற்றும் பிரேமலதா ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.
விலையில்லா பொருட்கள் விநி யோகம் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இனியும் இலவசங்களை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். அதனால், பெருவாரியாக விவசாயிகள் பயன்பெற்றனர். ஆனால், இப்போது தமிழக அரசு வழங்கும் இலவசங்களால் அரசுக்கு கடன்தான் அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே 77,000 கோடி யாக கடன் உயர்ந்துள்ளது. இதில் 15,000 கோடிக்கு கடனுக்கான வட்டி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சி அமைந்தால் தேமுதிக-வுக்கு அமைச்சரவையில் இடம் கேட்கப் படுமா?
சமயம் வரும்போது இதுபற்றி தலை வர் விஜயகாந்த்தான் முடிவு செய்வார்.
2016-ல் சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிக கூட்டணி அமைக்கப்படுமா?
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியு டனும் கூட்டணி இல்லை. 2016-ல் நாங்கள் தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்போம். ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்.