

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் வேந்தர் மூவீஸ் மதனின் தாய், மனைவியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
வேந்தர் மூவீஸ் மதன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த மே இறுதியில் மாயமானார். மதனைக் கண்டுபிடித்து மீட்கக்கோரி அவருடைய தாய் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத் துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக மதன் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திலும் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மதனைக் கைது செய்தாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
ஆகவே வரும் அக்டோபர் 6-ம் தேதிக்குள் மதனைக் கைது செய்து நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையெனில் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என்றனர்.
தேடுதல் வேட்டை
இதனால் மதனை கைது செய்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் உள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மதனின் கூட்டாளிகள் காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறோம். மதன் நேபாளத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் அவரை கண்டுபிடித்து விடுவோம். 2 தனிப்படையினர் நேபாளத்தில் தேடி வருகின்றனர்.
மதனின் இருப்பிடம் குறித்த தகவல்களை பெற அவரது தாயார் தங்கம், மனைவி சுமலதா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.