Published : 23 Feb 2017 02:12 PM
Last Updated : 23 Feb 2017 02:12 PM

ஆட்சி கவிழ்ந்துவிடும் என அதிமுகவினரே பேசும் அளவுக்கு எங்கள் போராட்டம் வெற்றி: ஸ்டாலின்

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிமுகவினரே பேசும் அளவுக்கு திமுகவின் உண்ணாவிரத அறப் போராட்டம் வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திக்க இன்று டெல்லிக்கு புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

நேற்று மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். குற்றவாளியாக தண்டனை பெற்று சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் நடந்த வாக்கெடுப்பின் போது நடைபெற்ற அக்கிரமங்கள், அநியாயங்கள், அதற்கு துணை நின்ற சபாநாயகர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே தமிழக பொறுப்பு ஆளுநரிடம் விளக்கமாக எடுத்து சொல்லி இருக்கிறோம். இது தொடர்பாக நீதிமன்றத்துக்கும் சென்றிருக்கிறோம்.

தொடர்ந்து இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை எங்களுடைய முதன்மைச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருடன் சென்று சந்திக்க இருக்கிறோம். அதற்கான நேரம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினைகள் பற்றி அவரிடத்தில் விரிவாக எடுத்துரைப்போம்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் முறையாக நிறைவேற்றப்பட்ட நிலையில் திமுக தேவையின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்து இருக்கிறாரே?

அவர் எந்த கட்சியில் இருக்கிறார்? நாளை எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதைப் பார்த்து விட்டு அதன் பிறகு விளக்கம் சொல்கிறேன்.

உண்ணாவிரதப் போராட்டம் எந்தளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறது?

அதாவது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிமுகவினரே சொல்லக்கூடிய அளவிற்கு எங்களுடைய உண்ணாவிரத அறப் போராட்டம் மிகப்பெரிய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்த ஆட்சிக்கு பொதுமக்களிடம் உள்ள எதிர்ப்பு நேற்று நடந்த போராட்டத்தில் தெரிய வந்ததா?

வழக்கமாக தேர்தல் நேரத்தில் தான் பொதுமக்கள் ஆட்சிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை இப்போதே வெளிக்காட்ட ஆரம்பித்து உள்ளனர்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x